தென் மேற்கு பருவ மழை தீவிரம்: வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தென் மேற்கு பருவ மழை தீவிரம்: வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக உருவாகும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரு சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து கிடந்தன.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சென்னை டிஜிபி அலுவலகம், திருவள்ளூர் பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் 10 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 9 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் 8 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in