Published : 05 Nov 2018 01:51 PM
Last Updated : 05 Nov 2018 01:51 PM

மெரினா கடற்கரையில் கொல்லப்பட்ட இளம்பெண் அடையாளம் தெரிந்தது: 2 பேரிடம் போலீஸ் விசாரணை

மெரினா கடற்கரையில் நேற்று, பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக இரண்டு பேரைப் பிடித்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..

சென்னை மெரினா கடற்கரையில், நீச்சல் குளம் பின்புறம் நேற்று காலை நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாதி மூடியும் மூடாமலும் பெண் உடல் ஒன்று மணலில் புதைந்து கிடந்ததைப் பார்த்தவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் அந்தப் பெண் பிணமாகக் கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சதுக்கம் போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாகக் கிடந்த பெண்ணுக்கு 30 வயதிலிருந்து 35க்குள் இருக்கும். மாநிறமாக இருக்கும் அவர் கடுமையாகத் தாக்கப்பட்ட அறிகுறி தெரிந்தது. அவர் முகத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்களும், மூக்கில் ரத்தமும் வழிந்த நிலையில் கிடந்தார்.

அவர் அருகில் அந்தப் பெண்ணின் காலணியும், ஆண்கள் அணியும் ஒரு ஜோடி காலணியும் இரண்டு மூன்று காலி குவார்ட்டர் மது பாட்டில்களும் கிடந்தன. அருகில் அந்தப் பெண்ணின் கைப்பை கிடந்தது. அதில் சாதாரண வகை செல்போன்கள் 3 இருந்தன. அதில் இரண்டு சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. ஒரு போனில் கடைசியாக பேசப்பட்டிருந்த 3 எண்களைச் சேகரித்த போலீஸார் அதற்கு போன் செய்து பார்த்தனர். அப்போது அவர்கள் இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

பின்னர் மீண்டும் மீண்டும் போன் செய்த போலீஸார் அவர்கள் 3 பேரிடமும் பேசியபோது அந்தப் பெண் யாரென்றே தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். அதில் 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பையில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா எனவும் போலீஸார் சோதனை நடத்தினர். அதில் அந்தப் பெண் மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி (35) என்பது தெரியவந்தது. வேறு தகவல் தெரியவில்லை.

கலைச்செல்வி ஏன் சென்னை வந்தார், சென்னையில் பழகிய ஆண் நண்பர்கள் யாராவது வரவழைத்து தனிமையில் இருந்து கொன்றார்களா? அல்லது சென்னைக்கு வந்த கலைச்செல்வியை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார்களா? என்கிற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் அல்லது அதிகாலையில் தனிமையில் இருக்க அந்தப் பெண்ணை அழைத்து வந்த மர்ம நபர் அல்லது இரண்டு நபர்கள் கலைச்செல்வியுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம், பின்னர் தனிமையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அந்தப்பெண்ணைச் சரமாரியாகத் தாக்கி கொலை செய்திருக்கலாம், பதற்றத்தில் மண்ணைப்போட்டு மூடிவிட்டு அந்த நபர்கள் தப்பி ஓடியிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x