Published : 04 Nov 2018 12:09 AM
Last Updated : 04 Nov 2018 12:09 AM

தமிழகத்தில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் மரணம்

மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மர்மக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரேநாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஒரேநாளில் 2 பெண்கள் இறந்தனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு ஏராளமானோர் இறந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சலுக்கு 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 98 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த முத்துசெல்வி(32), சிவகங்கை மாவட்டம் கீழக்குடியைச் சேர்ந்த சித்ரா(50) ஆகியோர் நேற்று இறந்தனர். காய்ச்சலுக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறவருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காய்ச்சல் வார்டுகளில் மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து டீன் மருதுபாண்டியன் கூறும்போது, "சனிக்கிழமை இறந்த 2 பேருக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் இல்லை. சாதாரண காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். சிகிச்சையில் ஓரிரு மரணங்கள்ஏற்பட்டாலும், பெரும்பான்மையான நோயாளிகள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புகின்றனர். காய்ச்சல் அறிந்தவுடன் சிகிச்சைக்கு வந்தால் அச்சப்பட வேண்டிய அவசியம் இருக்காது" என்றார்.

கோவை, திருப்பூர், நீலகிரியில் பன்றிக் காய்ச்சல், மர்மக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 12 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், மர்மக் காய்ச்சலுக்கு 56 பேரும் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலத்தில் மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்தது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் அய்யந்திருமாளிகை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாநகராட்சி துப்புரவு பணியாளரான ஜெயராமனின் மகன் சாந்த் (4), கடந்த வாரம் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,  சேலம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காய்ச்சல் அதிகமானதால், மீண்டும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வழியில் சாந்த் உயிரிழந்தார்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் விசாரித்து வருகின்றனர். சிறுவனின் தாய், பாட்டி, சகோதரர் உள்ளிட்டோரும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

உயிரிழப்புகளைத் தடுக்க அரசு அலுவலர்கள் குடியிருப்புப் பகுதியில் நிலவும் சுகாதாரமற்ற நிலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 88 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 5 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

தஞ்சை, புதுகை

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்புடன் 8 பேரும், பன்றிக் காய்ச்சல் பாதிப்புடன் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x