

கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த் திகை தீபத் திருவிழா காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத் துடன் கடந்த 11-ம் தேதி இரவு தொடங்கியது. பின்னர், பிடாரி அம் மன் மற்றும் விநாயகர் உற்சவத்தை அடுத்து, மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 14-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள், மாட வீதியில் உலா வந்தனர். 7-ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து, கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4 மணிக்கு, மூலவர் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், தங்கக் கொடி மரம் முன்பு உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்தி கள் எழுந்தருள, ஆண், பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். அதன்பிறகு, அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும்.
இதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில், ‘அண்ணாமலை யாருக்கு அரோகரா’ முழக்கத் துடன் மகா தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி தருவதால், கோயில் நடை மாலை 6 மணிக்கு சாத்தப்படும். பின்னர், சிறப்பு பூஜைக்கு பிறகு, மறுநாள் அதிகாலை கோயில் நடை திறக்கப்படும். மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு தொடர்ந்து காணலாம்.
மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், அண்ணாமலை உச்சிக்கு கொட்டிய மழையில் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ஆயிரம் மீட்டர் காடா துணி மற்றும் 3,500 கிலோ நெய் ஆகியவை இன்றுமுதல் கொண்டு செல்லப்படும். பவுர்ணமி நேற்று தொடங்கியதால், பிற்பகல் முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் கிரிவலம் சென்றனர்.