Published : 20 Nov 2018 04:28 PM
Last Updated : 20 Nov 2018 04:28 PM

கஜா புயல்: மக்கள் பட்டினியுடன் உள்ளனர்; அமைச்சர்களோ அதிகாரிகளோ பார்வையிடவில்லை; திருநாவுக்கரசர் கண்டனம்

'கஜா' புயலால் பல குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை புரட்டி போடப்பட்டுள்ளது என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருநாவுக்கரசர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய - மாநில அரசுகளால் முறையான, போதுமான நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. மத்திய அரசும், தமிழக அரசும் நிவாரண நிதி உதவியோ, நிவாரண உதவிகளையோ, அத்தியாவசியப் பொருட்களையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக சென்றடைய போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இழப்பிலும், வருத்தத்திலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களிலும், சாலை மறியல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களின் வருகையால் மக்களுக்கு பயன் ஏதும் ஏற்படாததால் அமைச்சர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

உயிர் சேதம், தென்னை, வாழை மற்றும் ஏனைய மரங்கள், விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், வீடுகள் மற்றும் கால்நடைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் 80 சதவீத தென்னை, வாழை மற்றும் படகுகளின் அழிவால் சம்மந்தப்பட்ட மக்களின் குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை புரட்டி போடப்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். அரிசி, உணவுப் பொருட்கள், பால், குடிநீர் ஏதுமின்றி பல இடங்களில் பட்டினி தொடர்கிறது.

மத்திய பாஜக அரசோ மத்திய பேரழிவு நிதியிலிருந்து நிதி ஒதுக்காமல் இருப்பதும், மத்திய அமைச்சர்களோ, அதிகாரிகளோ தமிழகத்தை புறக்கணிக்கிற விதத்தில் இதுவரை கண்டு கொள்ளாமலும், பார்வையிட வராமலும் இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. தமிழக முதல்வர் போதுமான, முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்காமலும் இருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

அரிசி, ஜமுக்காளம், போர்வை, வேட்டி, சேலை, கைலி, துண்டு, பால் பவுடர், ரொட்டி, பிஸ்கட், குடிநீர், பாத்திரங்கள், மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படக் கூடிய பொருட்களை பாதிப்பிற்குள்ளாகாத தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் நிவாரணப் பொருட்களை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கட்டாயப்படுத்தாமல் திரட்டி, சேகரித்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களுக்கு அந்தந்த மாவட்டத் தலைவர்களோடு தொடர்பு கொண்டு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதோடு, மேலும் இப்பணிகளை உடனே தொடங்கி செய்திடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x