

பெங்களூரை சேர்ந்த திருமணமான பெண், குழந்தை இருப்பதை மறைத்து இளைஞரை சென்னைக்கு அழைத்து வந்து வழக்கில் சிக்க வைத்துள்ளார்.
வாணியம்பாடியை சேர்ந்தவர் முகமது பிலால் (21) பெங்களூரில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது கடைக்கு பெங்களூர் சிவாஜி நகரில் வசிக்கும் ஜெயபாத் தலாசும் (19) என்ற பெண் அடிக்கடி துணி எடுக்க வருவதுண்டு. இதில் இருவரும் நட்பாகி பின்னர் காதலித்துள்ளனர்.
பல மாதங்களாக இருவரும் போனில் பேசி தங்கள் காதலை வளர்த்துள்ளனர். தங்கள் காதலுக்கு தனது வீட்டில் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இருவரும் சென்னைக்கு ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என பிலாலிடம் அவரது காதலி ஜெயபாத் தலாசும் கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னைக்கு சென்று திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்த அவர்கள் நேற்று சென்னைக்கு வந்தனர். கோயம்பேட்டில் வந்திறங்கிய பிலால் தனது நண்பன் வவுசான் என்பவர் உதவியுடன் தனது காதலி தாலாசின் நகையை அடகு வைத்தார்.
அந்தப்பணத்தில் அரும்பாக்கத்தில் வீடு பிடித்து வாழ்க்கையை துவக்க திட்டமிட்ட அவர்கள், அரும்பாக்கத்தில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் பெண் வீட்டார் நகையுடன் தங்கள் பெண்ணை பிலால் கடத்தி சென்றுவிட்டதாக கர்நாடகா, சிவாஜி நகர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
பெண் கடத்தல் வழக்கு அடிப்படையில் பிலால் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்த போலீஸார் பிலாலின் செல்போன் சிக்னல் மூலம் அரும்பாக்கத்தில் இருப்பதை அறிந்து அரும்பாக்கம் போலீஸார் உதவியுடன் காதலர்களை பிடித்தனர்.
இதனிடையே பெண் வீட்டார் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். பிலாலை அவர்கள் தாக்க, பிலால் ஏன் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துக்கொண்டால் என்ன தப்பு என்று கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார் காதலித்து கல்யாணம் செய்வது தப்பில்லை, ஆனால் அடுத்தவர் மனைவியை காதலித்து கல்யாணம் செய்வது சரியா? எனக்கேட்டு தாக்கியுள்ளனர்.
என் காதலிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று அதிர்ச்சியில் காதலியை பார்க்க அவர் தலைக்குனிய, கல்யாணம் மட்டுமல்ல குழந்தையும் உள்ளது என்று பெண் வீட்டார் கூற திருமணமானதையும், குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து ஏமாற்றி சென்னை அழைத்து வந்தது பிலாலுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த உண்மையை அறியாமல் காதலுக்கு உதவுகிறேன் என இவர்களுக்கு உதவிய பிலாலின் நண்பன் வவுசான் கடத்தலுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரத்தில் வழக்கில் சிக்கினார். திருமணமான பெண் காதலிப்பதாக ஒருவரையும், அவருக்கு உதவ வந்த வாலிபரையும் வழக்கில் சிக்க வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக போலீஸார் அந்தப்பெண்ணையும், பிலாலையும் கர்நாடகா அழைத்துச் சென்றனர். பிலால் மீது பெண் கடத்தல் வழக்கு உள்ளதால் சிவாஜி நகர் போலீஸார் அவரை கைது செய்தனர்.