

சென்னை வடபழனியில் 2017-ம் ஆண்டு தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தை இடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சி ஆணையரை நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு மே மாதம் சென்னை வடபழனி பெருமாள்கோவில் தெற்குத் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டடம் விதிமீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிச் சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சட்டவிரோத கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர். இதேபோன்று தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்துக்கு அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
மனுதாரர் நேரடியாக பாதிக்கப்படாததால் இதை பொது நல வழக்காக கருத முடியாது என நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சம்பத் அமர்வு உத்தரவிட்டது.