

பல்லாயிரம் மைல் பறந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் வலசை (சீசன்) வரத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல், சீரான தட்ப வெப்பநிலையைத் தேடி தமிழகத்தின் செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை, வேதாரண்யம், கடலூர், தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்டீன் பிளமிங்கோ, அமெரிக்கன் பிளமிங்கோ, சைலியன் பிளமிங்கோ, ஜாம்ஸெஸ் பிளமிங்கோ ஆகிய வகைகள் வருடந்தோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் வலசை (சீசன்) வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையிலும் ரஷ்யா நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வலசை (சீசன்) வருகின்றன.
இந்த ஆண்டு பருவமழை கடந்த நவம்பர் முதல் வாரம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தன் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயல் தமிழகத்தை கடந்துள்ள நிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்பகுதிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து பல்லாயிரம் மைல் பறந்து பிளமிங்கோ பறவைகள் தற்போது வரத் தொடங்கியுள்ளன.
தனுஷ்கோடிக்கு வந்துள்ள கிரேட்டர் பிளமிங்கோ வகையைச் சேர்ந்த பறவைகள் மூன்றிலிருந்து இருந்து ஐந்து அடி உயரத்தில், இளம் சிவந்த கால்களுடன், பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ளன. தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் சுற்றித்திரியும் பிளமிங்கோ பறவைகளை ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் ஆர்வமாகப் பார்த்து மகிழ்கின்றனர்.
தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் நூற்றாண்டுகாலமாக தவறாமல் வந்து கொண்டு இருக்கின்றன. பிளமிங்கோ பறவைகளின் வருகையை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அதிர்ஷ்டமாகவும் கருதுதுவது குறிப்பிடத்தக்கது.