குமரியில் சோகம்: மின்சாரம் தாக்கிய மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் கணவர் பலி

குமரியில் சோகம்: மின்சாரம் தாக்கிய மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் கணவர் பலி
Updated on
1 min read

மின்சாரம் தாக்கிய மனைவியைக் காப்பாற்றச் சென்ற போது, கணவர் உயிரிழந்த சம்பவம் கனத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், இரணியல் அடுத்த தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (34). இவரது மனைவி புனிதா (29). இவர்களுக்கு திருமணமான நிலையில் புனிதாவின் வீட்டிலேயே சேகர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை புனிதா துணி துவைத்து அதை உலர வைப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

துணியை உலர வைப்பதற்காக இரும்புக்கம்பியை கொடி கட்டும் கயிறாகப் பயன்படுத்தியிருந்தனர். அங்கு கட்டப்பட்டிருந்த கம்பியில் துவைத்த துணிகளை புனிதா காயப் போட்டார்.

ஆனால் அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதை அறியாத புனிதா ஈரமான துணையைப் போட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய, புனிதா அலறியுள்ளார். அவர் துணியுடன் துடிக்க மின்சாரம் பாய்ந்த கொடிக்கம்பி அறுந்தது. இதனால் புனிதா கீழே விழுந்துள்ளார்.

புனிதாவின் அலறல் சத்தம் கேட்டு பதைபதைத்து ஓடிவந்த கணவர் சேகர் கீழே கிடந்ததால் அவரைப் பிடித்து இழுத்து தள்ளியுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த கம்பியை மிதித்துள்ளார்.

இதில் பலமாக மின்சாரம் பாய்ந்த நிலையில் தூக்கிவீசப்பட்ட சேகர் கீழே விழுந்து மயக்கமானார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மின்சாரத்தை நிறுத்தி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சேகர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த புனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியைக் காப்பாற்றிய கணவன் அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in