

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தன்ர. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது.
வன்முறையை தூண்டியதாக 20 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் சென்னை சிபிஐ போலீஸில், அக்டோபர் 8-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி வந்து, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். காயமடைந்தவர்களிடம் தற்போது விசாரணை நடக்கிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி கே.எஸ்.அர்ச்சுணன், சிபிஐ இணை இயக்குநரிடம் நேரடியாக புகார் அளித்தார். ஆனால், இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல் சிபிஐ காலம் கடத்தி வந்ததையடுத்து, சிபிஐக்கு எதிராக அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் சிபிஐ நேற்று முன்தினம் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதில் அதிகாரிகளின் பெயர்களோ, எத்தனை பேர் என்ற விவரமோ குறிப்பிடப்படவில்லை.