Published : 05 Nov 2018 03:48 PM
Last Updated : 05 Nov 2018 03:48 PM

வட மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: தினகரன் கண்டனம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. பெண்கள் அச்சமின்றி சுதந்திரமாக இருப்பதற்கான அத்தனை அடிப்படைகளையும் உருவாக்கித் தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், தற்போது ஜெயலலிதாவின் அரசு என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டு, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ச்சியாகவும், மிகுந்த கொடூரமாகவும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. வட மாநிலங்களில் எப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழல் பெண்களுக்கு ஏற்பட்டதோ அதேநிலை தமிழகத்திலும் காலூன்றத் தொடங்கியுள்ளது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த பதிமூன்று வயது சிறுமி ராஜலட்சுமி கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட போதும், இக்கொடூரக் குற்றத்தை செய்த நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி நடவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்தியதாக செய்திகள் வந்தபோது, அதற்கு கடும் கண்டனங்கள் எழும்பிய பின்னர்தான் வேறு வழியின்றி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை தாமதமாக நடக்கும்போது, குற்றங்கள் எப்படி குறையும்?

தொடர்ச்சியாக பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொடூரக் கொலைகளும், சங்கிலி பறிப்புச் சம்பவங்களும், தமிழகத்தில் நடந்து வருவதை ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டுதான் உள்ளன. போதுமான சட்டங்கள் இருந்தும்கூட, சட்டத்தை செயல்படுத்தக்கூடிய மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படவேண்டிய பிரச்சனைகளை மிகவும் மேம்போக்காகக் கையாளும் முதல்வர் பழனிசாமி அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x