Published : 24 Nov 2018 02:37 PM
Last Updated : 24 Nov 2018 02:37 PM

சொந்த நிலத்தில் அகதியாகிவிட்டோம்... புதுக்கோட்டையின் வரலாற்றுத்துயர்!

வெள்ளம், புயல் ஆகியவற்றால் அதிகரிக்கும் மழைநீரால் குடிநீர், பாசனத்திற்கான நீர் அதிகரித்து பசுமை தழைத்தோங்கும் என்பது தான் பொதுபுத்தி. ஆனால், புயல் அல்ல, தமிழகம், கேரளா போன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கூட வறட்சியில் சிக்கித் தவிக்கிறது என்பதுதான் யதார்த்தம். அப்படியென்றால், 'கஜா' புயல் பசுமை பாய்ந்த இடங்களையெல்லாம் காய்ந்த சருகாக்கி விட்டிருக்கிறது என்பதே உண்மை நிலை.

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலேயே மிக வறட்சியான மாவட்டம் புதுக்கோட்டை. சோலை வனமாக இருந்த தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை 'கஜா' புயல் பாலைவனமாக மாற்றிவிட்டது என கிராம மக்களும் விவசாயிகளும் வேதனையில் புலம்புகின்றனர். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் ஏற்கெனவே பாலைவனமாக இருக்கும் மாவட்டம் தான். அதில், 'கஜா' புயலால் ஏற்பட்ட இழப்புகள் அம்மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் சந்திக்கும் வறட்சியை இன்னும் இன்னும் அதிகப்படுத்தி, மாவட்டம் முழுதும் போர்க்களமாக காட்சியளிக்கிறது.  

குறைவான மழைப்பொழிவு, ஆண்டுதோறும் நிலவும் வறட்சி, விவசாயக் கடன்கள் ஆகியவற்றால் விவசாயத்தை விட்டு வேறு கூலி தொழில்களுக்கு செல்பவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம். விவசாயிகளின் நிலைமை இப்படியென்றால் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் நிலைமை இன்னும் மோசமானது. விவசாய தொழில் இல்லாமல் ஆண்டுதோறும் வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயரும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ள தலித் குடும்பங்களின் எண்ணிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் என, கிராமங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் பத்திரிகையாளர் சாய்நாத் தன்னுடைய 'Everybody loves a good drought' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். 1990-களில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தனர். பெரும்பாலானோர், வேறு பல கூலி தொழில்களுக்கு மாறினர்.

தன் மாவட்டத்தின் வறட்சி நிலைமை குறித்து நமக்கு விளக்கிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, "புதுக்கோட்டை முழுவதும் வறட்சி தான். வறட்சியால் விவசாயம் செய்ய முடியாது. முன்பெல்லாம் இலங்கைக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக அதிகம் பேர் சென்றனர். 1970-களுக்குப் பிறகு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றனர். வெளிநாடுகளில் ஆண்டுக்கணக்கில் உழைத்த பணத்தில் தான் நிலம் வாங்கி போர் போட்டு விவசாயம் செய்தனர். இப்போதுதான் விவசாயமெல்லாம் இங்கு நடக்கிறது. முன்பெல்லாம் அதற்கும் வழியில்லை" என்கிறார் எம்.எம்.அப்துல்லா.

மழை குறைவு என்பதால், ஆற்றுப்பாசனம் இம்மாவட்டத்தில் மிக மிக குறைவு. அறந்தாங்கி வட்டத்தில் மட்டும் தான் குறைந்தளவில் ஆற்றுப்பாசனம் மூலம் விவசாயம் செய்கின்றனர். மழையை நம்பி இருப்பதால் எப்போதும் தோப்பு விவசாயம் தான். தென்னந்தோப்பு, சவுக்குத் தோப்பு, ஆர்.எஸ்.பதி (தைல மரம்) தோப்பு, முந்திரித் தோப்பு இவை தான் பிரதானம். தென்னை, தேக்கு, மா, பல, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயமும் நடைபெறுகின்றன. குறிப்பாக வறட்சியைத் தாங்கி வளரும் சவுக்கு, ஆர்.எஸ்.பதி தைல மரங்கள் அதிகம். தமிழ்நாட்டில் பன்ருட்டிக்கு அடுத்து முந்திரிக்கு பெயர்போனது புதுக்கோட்டை தான். வெளிநாடுகளில் சம்பாதித்து வறட்சி பூமியில் விவசாயம் செய்த முந்திரி, சவுக்கு, தென்னை என தோப்பு விவசாயம் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 'கஜா' புயலால் 90 சதவீதம் அழிந்துவிட்டது.

"சொல்லப்போனால், காவிரி கடைமடைப் பகுதியான ஆவுடையார்கோயில் யூனியனில் மட்டும் தான் காவிரி நீர் வரும். கடைமடைப் பகுதி என்பதால் அந்த பகுதிக்கே பெரும்பாலும் காவிரி நீர் வராது. தூர்வாரினால் சில சமயம் வரும். இல்லையென்றால் அதுவும் வராது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலுமே மழையை நம்பிய விவசாயம் தான். அதனால், நெல் விவசாயம் ரொம்ப குறைச்சல்" என்கிறார் எம்.எம்.அப்துல்லா. 

ஆதனக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகள் முழுக்க முந்திரி விவசாயம். வடகாடு, ஆவணம், சீரமங்கலம் பகுதிகளில் தென்னை விவசாயம். மாவட்டம் முழுவதும் பரவலாக சவுக்கு, ஆர்.எஸ்.பதி மரம் இருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள சவுக்கு மரங்கள், ஆர்.எஸ்.பதி மரங்களில் இருந்து எடுக்கப்படும் இடு பொருட்கள் தான் கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. அடுத்து வரும் மாதங்களில் பிரிண்டிங் தொழில், அவை சார்ந்த வேலைவாய்ப்புகள் இவற்றில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் அங்குள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். சவுக்கு மரம் சார்ந்த தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். 'கஜா' புயலால் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. 

 

நெல், தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், அந்த குறைந்தபட்ச நிவாரணம் கூட சவுக்கு, தைல மர தோப்புகளின் பாதிப்புகளுக்கு அறிவிக்கப்படவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

அன்னவாசல் வட்டத்திலுள்ள முத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அப்பாவு பாலாண்டார். இவர் கட்சி சார்பற்ற  விவசாயிகள் சங்க செயலாளராகவும் இருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாய இழப்புகள் குறித்து அவர் கூறுகையில், "தென்னை, தேக்கு மரங்கள் பெரும்பாலும் சாய்ந்துவிட்டன. பாரம்பரிய அரச மரங்கள் மட்டுமே நிலைத்துள்ளன. 4 ஏக்கர் நெல் நான் நடவு செய்திருந்தேன். 2 ஏக்கரில் நெல் விதைப்பும் செய்திருந்தேன். கடந்த பல ஆண்டுகளாகவே வறட்சி. தண்ணீர் இல்லாததால் நாற்று முற்றினாலும் 'பரவாயில்லை' என விவசாயிகள் விதைத்திருந்தனர். அதற்குள் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் 'கஜா' எடுத்துக்கொண்டுவிட்டது", என கூறுகிறார் அப்பாவு.

அன்னவாசல் வட்டத்தில் சவுக்கு மரங்கள் ஏராளம். 5-6 ஏக்கரில் அப்பாவுக்கு சொந்தமான சவுக்கு மரங்களும் சேதம் அடைந்துள்ளன. வறட்சியைத் தாங்கும் என்பதாலும், விவசாய தொழிலாளர்கள் தேவையில்லை என்பதாலும், 4 ஆண்டு கால பயிரான சவுக்கு அதிகம் இப்பகுதிகளில் பயிரிடப்படுகின்றது.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொருளாளரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டத்தைச் சேர்ந்த விவசாயி செங்கோல் கூறுகையில், "நெல், சோளம், கரும்பு இப்பகுதிகளில் அதிகம் பயிரிடுவர். மழை இல்லாததால் நெல் உள்ளிட்ட பயிர்கள் பல ஆண்டுகளாக பயிரிடவில்லை. போரில் தண்ணீர் இல்லை. ஏரிப்பாசனம் இல்லை. முள்ளங்குறிச்சி கிராமத்தில் மட்டுமே தென்னை, வாழை, கரும்பு என 2 ஆயிரம் ஏக்கரிலான மரங்கள் சேதம். ஆலங்குடி முழுவதையும் சேர்த்தால் 10 ஆயிரம் ஏக்கருக்கு வரும்", என்கிறார்.

தென்னை, வாழை மரங்களை மட்டுமே அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்வதாக கூறும் விவசாயி செங்கோல், தங்களது சங்கம் மூலமாக கரம்பங்குடி, வானக்கன்காடு, மலையூர், சூரக்காடு உள்ளிட்ட குக்கிராமங்களில் நிவாரணம் கிடைக்க விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக கூறுகிறார்.

அரசியல் தலைவர்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே கறம்பங்குடியை சுற்றியுள்ள கிராமங்களை பார்வையிட்டதாக அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியன், "புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு சென்று அங்கு ஏற்பட்டுள்ள விவசாய இழப்புகளையும், சேத விவரங்களையும் அரசுக்கு அனுப்பியுள்ளோம். கரும்பு விவசாயிகள் வருடந்தோறும் பாதிக்கப்படுபவர்கள். அரசு நிலுவைத் தொகை தராததால் கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகை எப்போதும் கசப்பானது தான் ஒரு ஏக்கருக்கு 80,000 மேல் கரும்புக்கு செலவாகும். ஆனால், இழப்பீடு 13,500 ரூபாய் சொல்லியிருக்கின்றனர்" என்கிறார், பி.ஆர்.பாண்டியன்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாய கூலித் தொழிலாளர்களின் நிலைமை குறித்து பேசிய பி.ஆர்.பாண்டியன், "அங்குள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் 2012 ஆம் ஆண்டிலிருந்து வேலை இழப்பைச் சந்தித்து வருகின்றனர். வறட்சியால் அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக செல்லும் நிலைமை புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம். இப்போது கிட்டத்தட்ட 10 தினங்களாக வேலை இழந்துள்ளனர். அவர்களுடைய சொற்ப தினக்கூலி நாளொன்றுக்கு 200-400. இப்போது அதுவும் இல்லாமல் ஆகிவிட்டது. இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.5,000 வரை வழங்க வேண்டும்" என்கிறார்.

விவசாய பாதிப்புகள் தவிர்த்து 'கஜா' புயலால் பல கிராமங்கள் தனித்துவிடப்பட்ட நிலைமையும் உள்ளது.

கீரமங்கலம், கொத்தமங்கலம், சூரன்விடுதி, வடகாடு உள்ளிட்ட கிராமங்கள் தனித்து விடப்பட்டிருக்கின்றன. இங்கு முகாம்களே அமைக்கப்படவில்லை. புயல், வெள்ளம் என்றாலே கடலோர கிராமங்களுக்குத் தான் என்கிற மனநிலை மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு புதுக்கோட்டையில் ஓங்கி ஒலிக்கிறது.

தமிழக அரசின் மீதும், அதிகாரிகள் மீதும் கோபம் அடைந்து அவர்களை வழிமறித்தல், அமைச்சர்களை தாக்குதல் போன்றவை புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் நிகழ்ந்துள்ளன. கொத்தமங்கலம் கிராமத்தில்தான் போராட்டம் செய்ததற்காக இளைஞர்கள், சிறுவர்கள் வித்யாசமில்லாமல் ஆண்கள் அனைவரும் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் வரை காவல் வைக்கப்பட்டனர்.

போராட்டங்களை திமுக தூண்டிவிடுகிறது என முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவையும், அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர்.

ஆனால், "கடலோர மாவட்டங்களுக்கு இது காலங்காலமாக நடக்கும் விஷயம். அவர்கள் பேரிடர்களுக்கு பழக்கப்பட்டவர்கள். 1955-க்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் புயல் பாதிப்பு இதுதான். 2-3 தலைமுறைகளுக்கே புயல் என்பது எப்படியிருக்கும் என தெரியாது. அதனால், மீள முடியுமா என்ற கேள்விக்கு பதில் தெரியாததால் அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களின் இழப்பு தான் கோபமாக மாறுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதது தான் இப்போது பெரும் சிக்கல். அரசு சார்பாக நாங்கள் இருக்கிறோம் என சொல்வதற்கு கூட ஆள் இல்லை. கவலைப்படாதீங்க என எங்களுக்கு யார் நம்பிக்கைக் கொடுப்பது?
 

இதனால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தத்தால் தான் வருகின்ற அரசு வாகனங்களை வழிமறித்தல், மறியல் போன்றவற்றில் மக்கள் ஈடுபடுகின்றனர்" என்கிறார் அப்துல்லா.

மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. புயல் ஓய்ந்து 8 ஆவது நாளான நேற்றுதான் புதுக்கோட்டை நகருக்கே மின்சாரம் வந்திருக்கிறது எனக்கூறும் மக்கள், கிராமங்களுக்குள் வர ஒரு மாதம் ஆகும் என்கின்றனர். போக்குவரத்தைப் பொறுத்தவரை சாலைகளில் சாய்ந்த மரங்களைத் தான் அப்புறப்படுத்தியிருக்கின்றனர். வயல், தோப்புகளில் உள்ளதை அகற்றவில்லை என தெரிவிக்கின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகம் நிலவுகிறது.

தன்னார்வலர்களும் கடந்த 2 நாட்களாகத் தான் புதுக்கோட்டை பக்கம் வர ஆரம்பித்திருப்பதாக கூறுகின்றனர்.

இழந்த பொருளாதாரம், விவசாய கூலி தொழிலாளர்களின் நிலைமை, எங்கெங்கிலும் வறட்சி இதனை சரிசெய்ய அரசு அதிகாரிகள், அம்மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுகின்றனர் புதுக்கோட்டை மாவட்ட மக்கள். 

கடலோர மாவட்டங்கள் என்றதும்,  பேரிடரும் அழிவுகளும் மட்டுமே நினைவுக்கு வரும் அளவுக்கு தமிழகத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கடல் காக்கும் மீனவர்களுக்கு கஜாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முறையாக எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இணையம், தொலைத்தொடர்பு பிரச்னைகளால் மீனவர்கள் பிரச்னைகளை சரியாக வெளிக்கொண்டுவர முடியவில்லை என்கிறனர் கட்சிக்காரர்களும், தன்னார்வலர்களும். புதுக்கோட்டையின் கடலோரப் பகுதிகளான ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் படகுகள் அழிந்துள்ளன; மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஓகி மீனவர்களை அழித்தது என்றால், கஜா மீனவம் செய்வதற்கான ஆதாரங்களை அழித்திருக்கிறது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x