

'கஜா' புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க வரும் 22-ம் தேதி முதல்வர் பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியைக் கோர முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சேதமடைந்த வீடுகளை மக்கள் தாங்களாகவே சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் 12,371 மின்வாரிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் ஆயிரம் மின்கம்பங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.
'கஜா' புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட் டங்களில் புயல் பாதிப்புகளில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள், சீரமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி வரும் செவ்வாய்க்கிழமை (20-ம் தேதி) அன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார்.
இந்நிலையில் வரும் 22-ம் தேதி முதல்வர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'கஜா' புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த உடன் பிரதமர் மோடியைச் சந்தித்து புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியைக் கோர முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.