Published : 19 Nov 2018 10:02 AM
Last Updated : 19 Nov 2018 10:02 AM

புதுச்சேரியில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் பல லட்சம் கொள்ளை: டெல்லியைச் சேர்ந்த 2 பேர் கைது

புதுச்சேரியில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்த டெல்லியைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த சின்ன கரையாம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சாமுண்டீஸ்வரி (42), அங்கன்வாடி ஆசிரியை. இவரது வங்கிக் கணக்கில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பணம் அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டிருந்தது. இதையறிந்த சாமுண்டீஸ்வரி வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவரது வங்கிக் கணக்கு அட்டை எண்ணை வைத்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் போலி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி பணம் எடுத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடந்த 9-ம் தேதி புதுச்சேரி சிபிசிஐடி சைபர் கிரைம் போலீஸில் சாமுண்டீஸ்வரி புகார் அளித்தார். புகாரின் பேரில் சிபிசிஐடி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமைக் காவலர்கள் முகமதுலியாகத் அலி, பெரியண்ணசாமி, காவலர்கள் மணிமொழி, ஜோசப், இருசவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்கிம்மர் கருவியை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தி ரகசிய குறியீட்டு எண்ணை திருடி, போலி ஏடிஎம் கார்டு தயாரித்து நள்ளிரவு 11.45 முதல் 12.30 மணிக்குள் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பணம் திருடப்பட்ட செப்டம்பர் 7, 9 இரண்டு நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் புதுச்சேரியில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுத்தது யார் என்பது குறித்து தனிப்படையினர் விசாரித்தனர். மேலும் அவர்களின் மொபைல் எண்ணையும் போலீஸார் கண்காணித்தனர்.

அப்போது டெல்லி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்விநாதன் (29), ககன்குமார் (32) ஆகியோர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் டெல்லி சென்றனர். டெல்லி போலீஸ் உதவியுடன் கல்விநாதன், ககன்குமார் இருவரையும் கைது செய்து நேற்று புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.

இதுதொடர்பாக சீனியர் எஸ்பி மகேஷ்குமார் பர்ன்வால், சிபிசிஐடி சைபர் கிரைம் எஸ்பி செல்வம் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிடிபட்ட இருவரும் டெல்லியில் இருந்து புதுச்சேரி அருகே உள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்துக்கு வந்துள்ளனர். அங்கு தனியார் ஓட்டலில் அறை எடுத்து 4 நாட்களாக தங்கி ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ரகசிய குறியீட்டு எண்ணை திருடி, போலி ஏடிஎம் கார்டு தயார் செய்து பலரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

அந்த பணத்தை கூனிமேடு பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தங்களுடைய பெயரில் போட்டுள்ளனர். பின்னர் அறையை காலி செய்துவிட்டு டெல்லி சென்றுள்ளனர்.

மேலும், அவர்கள் புதுச்சேரியில் பல ஏடிஎம் மைங்களில் சுமார் ரூ.15 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளனர். ககன்குமார் மீது டெல்லியில் ஏடிஎம் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னரே இந்த ஏடிஎம் கொள்ளை குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x