Published : 09 Nov 2018 10:46 AM
Last Updated : 09 Nov 2018 10:46 AM

சமூக அவலங்களை அலசும் ‘டிராமா’- இரு ‘லொள்ளு’களின் சங்கமம்

காரசாரமான அரசியல் விஷயங்களையும் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசுபவர் ராதாரவி. பேட்டியோ, சினிமா விமர்சனமோ, எதுவானாலும், பார்ப்பவரையும், கேட்பவரையும் தனது தடாலடி நகைச்சுவையால் தன்வசப்படுத்துபவர் பாஸ்கி. இவர்கள் இருவரும் இணைந்து தோன்றும் பெருமையைப் பெறுகிறது, அரிகிரி தியேட்டர்ஸ் வழங்கும் ‘டிராமா’.

நாடகத்தின் தலைப்பே ‘டிராமா’ தான். தனது லொள்ளுத்தனத்தை தலைப்பிலேயே தொடங்கிவிட்ட பாஸ்கி, ‘டிராமா’ குறித்து நம்மிடம் கூறியதாவது:

நானும் ராதாரவியும் 2 ஆண்டு களுக்கு முன்பு சந்தித்தபோது, ‘‘நாம் இருவரும் சேர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ நாடகம் பண்ணலாமா?’’ என்று கேட்டார். ‘பாஸ்கி டிவி’ நிகழ்ச்சிகளுக்கே நேரம் சரியாக இருக்கிறது என்றேன். அப்புறம், ரெண்டு பேரும் அவரவர் வேலையில் பிஸியாகிவிட்டோம்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராதாரவி, ‘‘நாடகம் என்றால், மொட்டையோடு (பாஸ்கி) நடிப்பதுதான் என் சாய்ஸ்’’ என்றார். இதை கேள்விப்பட்டு, உடனே அவரை தொடர்புகொண்டு பேசினேன். ஒரே மாதத்தில் நாடகத்தின் ஸ்கிரிப்ட் எழுதி அவரிடம் காட்டினேன். ‘‘சினிமாவுக்கான கதைபோல இருக்கிறதே’ என்று பாராட்டியதோடு, அதில் நடிக்க மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.

அதில், நான் ஊடக உரிமையாளர். ராதாரவி சமூக சீர்திருத்தவாதி. நம் அன்றாட வாழ்வில் எளிதாக அத்துமீறி, போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிடும் பாத்திரம் என்னுடையது. அதை மதித்து, பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் பாத்திரம் அவருடையது. எங்கள் இருவருக்கும் ஏற்படும் உரசல்தான் கதை. அந்த தகராறில் தற்போதைய அரசியல், சமூக அவலங்கள் எல்லாமே அலசப்படும்.

அறிமுக நடிகை வர்ஷா, பிரபல நடிகர் தம்பி உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். தக் ஷின் இசையமைத்துள்ளார்.

பிரம்மகான சபா, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பார்த்தசாரதி சுவாமி சபா சார்பில் நாடகத்தின் தொடக்க விழா, சபா அங்கத்தினர்களுக்காக மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் வரும் 16-ம் தேதி நடக்க உள்ளது. 18-ம் தேதி தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கிலும் (மாலை 4 மணி), மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கிலும் (மாலை 7 மணி) நடக்க உள்ளது. டிக்கெட்கள் அரங்கில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x