

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடந்தது. அரசாணைகளை எரித்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.6.1988 முதல் வழங்கப்பட்டு வந்த மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழக அரசின் 7-வது ஊதியக்குழுவின் அரசாணை (எண் 234) மற்றும் 8-வது ஊதியக்குழுவின் அரசாணை (எண் 303) ஆகியவற்றின் மூலம் பெருமளவு குறைக்கப்பட்டது. சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே அந்த அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.மயில் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், மாநில துணை தலைவர் பெ.அலோசியஸ் துரைராஜ், மாநில செயலர் சி.ஜி.பிரசன்னா உட்பட 200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் கலந்துகொண்டனர். அவர் கள் அரசாணைகளின் நகல்களை எரித்தபோது போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் பொருளாளர் தி.கண்ணன், துணை பொதுச்செயலாளர் தா.கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் மு.அன்பரசு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகப் பொருளாளர் ஜம்பு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவத்சலம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
சென்னையைப் போல தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இதேபோன்று அரசாணை எரிப்பு போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.