

‘கஜா’ புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் சேதமடைந்த வீடுகளை மக்கள் தாங்களாகவே சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' 'கஜா' புயல் பாதித்த மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளினால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கடலோரக் காவல் படை மூலம் 70 கப்பல்களில் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை வழங்கப்பட்டதால் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
புயலால், ஆயிரக்கணக்கான மின் மாற்றிகளும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்து பலத்த சேதம் அடைந்துள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து மத்திய அரசு நிதியுதவி வழங்குவது குறித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.