

குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட கமல் 37 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உருக்கமான சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று குழந்தைகள் தினத்தை ஒட்டி ஜெமினியில் உள்ள சிறுமலர் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோர், வாய் பேச முடியாதோர் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
அப்போது அவரை வழி நெடுகிலும் குழந்தைகள் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் மேடையில் பேசும்போது கண்கலங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''இங்கே நான் வாழ்த்த வந்தேன் என்பதை விட வாழ்த்து பெற வந்தேன். நான் சினிமாவில் பாடி உங்களுக்கு உத்வேகமூட்டிய அந்தப் பாடல் இன்று எனக்கே தெம்பூட்டுவதுபோல் தோன்றியது.
நான் செல்ல வேண்டிய பாதையில் இன்னும் வேகமாக பீடுநடை போட்டுச் செல்ல குழந்தைகள் வாழ்த்தியதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
37 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் இதேபோன்ற மாணவர்களுடன் 'ராஜபார்வை' படத்திற்காக நானும், இளையராஜாவும் வந்தோம். அப்போது உள்ளே போகும்போது பலரும் பாட ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்து என்னாலும், இளையராஜாவாலும் அழுகையை அடக்க முடியவில்லை.
தனியாக இருவரும் வெளியே வந்து ஒரு மரத்தின் மறைவில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழுதோம்'' என்று கமல் பேசினார்.
பின்னர் குழந்தைகளுக்குப் பரிசளித்தார் கமல்.