Last Updated : 24 Aug, 2014 10:20 AM

 

Published : 24 Aug 2014 10:20 AM
Last Updated : 24 Aug 2014 10:20 AM

பேருந்து பயண அட்டையில் எச்.ஐ.வி. அடையாளம் நீக்கம்

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு சென்று வர தமிழகத்தில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அட்டையில் எச்.ஐ.வி. நோயாளிகள் என்பதை அடையாளம் காட்டும் விதமாக குறியீடுகள் (எய்ட்ஸ் கட்டுப்பாட்டு), சிகிச்சை பெறும் மையத்தின் விவரங்கள் அச்சிடப்பட்டதால் பயனாளிகளிடையே அவற்றை பயன்படுத்த தயக்கம் நிலவி வந்தது.

இலவச பயண அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் குறியீடுகளால் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளா னவர்கள் முறையிட்டு வந்தனர்.

நோய் குறித்த அடையாளங்கள் இல்லாத பேருந்து பயண அட்டை வழங்க வேண்டுமென அவர்களது வலியுறுத்தல்கள் குறித்து `தி இந்து' நாளிதழில் ஜனவரி மாதம் சிறப்புச் செய்தி வெளியானது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த பயண அட்டை பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்படும் பேருந்து பயண அட்டையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இலச்சினை நீக்கப்பட்டு, சாதாரண இலவச பேருந்து பயண அட்டையாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 32 மாவட் டங்களில் உள்ள 41 அரசு கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களில் ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்தை பெற்று வருகின்றனர். மாதத்தில் 2 முறை நேரில் சென்று சிகிச்சை பெற்று வரவேண்டிய தேவையும் அவர்களுக்கு உள்ளது. 2010 டிசம்பரில், தமிழக அரசு இலவச பேருந்து பயண அட்டைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

அரசின் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களுக்குச் செல்லவும், மருந்துகள் வாங்கவும் மாதத்துக்கு 4 முறை பயணம் செய்துகொள்ள 1.76 கோடி செலவில் இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால், அதிலிருந்த குறியீடுகளால் பலர் பேருந்து பயண அட்டையை பயன்படுத்தாமலேயே இருந்து வந்தனர். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையிலும், இலவச பயண அட்டையை வெறும் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்படுவதாகவும் கூறப்பட்டது.

தற்போது பேருந்து பயண அட்டையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயன்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய பயண அட்டையில் முன்புறம் பெயர், வயது, பாலினம், புறப்படும் இடம், சேருமிடம் உள்ளிட்ட தகவல்களும், பின்புறம் முகவரி, ஏ.ஆர்.டி எண், மையத்தின் பெயர், மருத்துவ அலுவலர் கையொப்பம், பயனாளியின் கையொப்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பழைய நடைமுறையில் இருந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக இலச்சினை நீக்கப்பட்டு, தமிழக அரசின் இலச்சினை மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. தனியே பயணப் பதிவுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகத்தில் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களுக்கு சென்று வருவதற்கான வருகைப்பதிவு முழு விபரங்களுடன் பதிவு செய்யப்படும். சில தினங்களுக்கு முன்பு இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் நலச் சங்க நிர்வாகி ஆர்.மீனாட்சி கூறுகையில்,

இதுவரை இருந்த பேருந்து பயண அட்டையில் பயனாளியின் புகைப்படத்துடன் அவரது விவரங்கள், தமிழக அரசு இலச்சினையும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக இலச்சினையும் இருந்தது. ஏற்கெனவே நோயால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டவர்களை இதுபோல பகிரங்கமாக அடையாளம் காட்டும் போது அது மன வேதனையை அதிகரிக்கும். அத்துடன் சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலை ஏற்படும்.

இதை அரசுக்கு உரிய முறையில் தெரிவித்து வந்தோம். தற்போது எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து எச்.ஐ.வி. குறித்த அடையாளங்கள் அதில் நீக்கப்பட்டுள்ளன. கோரிக்கையை பரிசீலித்து நடைமுறைப்படுத்த உத்தரவிட்ட முதல்வர், கோரிக்கையை பரிந்துரைத்த மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x