Published : 15 Nov 2018 08:19 AM
Last Updated : 15 Nov 2018 08:19 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - தமிழ்வழி பயின்றோர் பயன் பெறுவர்

இதோ... மீண்டும் ஒருமுறை, தனது தொழிற்முறை நிபுணத்துவத்தை வெளிப் படுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இயன்றவரை தேர்வர்களுக்கு சங்கடம் நேராதபடிக்கு,நன்கு திட்டமிட்டு, குறிப்பிட்ட நாளில் போட்டித் தேர்வை, திறம்பட நடத்தி முடித்துள்ள ஆணையத்துக்கு, நமது பாராட்டுகள்.

எப்போதும் போலவே, மொழித்தாள், பொது அறிவுத்தாள் என்று இரண்டு பாகங் கள். இவற்றில் மொழித்தாள், மிகச் சிறப்பு. தமிழ் இலக்கணம் சார்ந்த வினாக்கள் பெரு மளவில் இருந்தன. இவை அனைத்தும், பள்ளி வகுப்புகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களை முறையாகப் படித்தவர் களுக்கு மிக எளிமையாக இருந்திருக்கும். குரூப் 2 தேர்வு, பட்டம் முடித்தவர்கள் மட்டுமே, எழுத முடியும். ஆகவே, தேர்வின் பல கேள்விகள், உண்மையில் மிக எளிமையாக இருந்தாலும், ‘கால இடைவெளி' காரணமாக, சிலருக்குக் கடினமானதாகத் தோன்றி இருக்கலாம்.

‘அடையடுத்த ஆகுபெயர்', தளை வகைகள், வல்லினம் மிகும் இடம், திணை, இடம், மரபு வழுக்கள், உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுதல், பெயரெச்சத் தொடர், பெயர்ச் சொல்லை செயப்படு பொருளாக மாற்றும் வேற்றுமை உருபு ஆகியன தொடர்பான வினாக்கள், தேர்வர்கள் பலரையும் ‘அந்த நாள்' நினைவுக்குக் கொண்டு சென்று இருக்கக் கூடும். பிரித்து எழுது தல், ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கண்டுபிடித்தல் ஆகியன சுவாரஸ் யமாக அமைந்துள்ளன. கோப்பு, காசோலை, கடவுச் சீட்டு, நுழைவு இசைவு ஆகியவற்றில் ஆங்கிலம் அளவுக்கு, தமிழ்ச் சொற்கள் தெரியாமற் திணறியவர்கள் இனிமேலும் தாய்மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிற சிந்தனையை இந்தத் தேர்வு நிச்சயம் அவர்களின் மனங்களில் பதித்து இருக் கும். அந்த வகையில் மொழித் தாள் பாகம், இளைஞர்களை நல்வழிப்படுத்த உதவி இருக்கிறது.

தேர்வாணையம், நல்ல தமிழ்ப் பணி ஆற்றி இருக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சி தரு கிறது. (பொதுப் பாடப் பிரிவில், கடவுச் சீட்டின் ஆங்கிலப் பெயர் தரப்பட்டுளது!) ‘யார்?' வினாக்களைக் கணிசமாகக் குறைத்து இருக்கலாம். ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் யார்? கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? திவ்வியப் பிரபந்தத் துக்கு உரை எழுதியவர் யார்? புறநானூற் றுப் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்? பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையின் ஞானாசிரியர் யார்? மக்கள் கவிஞர் யார்? ‘புரட்சி முழக்கம்' எழுதியவர் யார்? சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?.. பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

வினாக்களைத் தேர்வு செய்வதில், வடிவமைப்பதில், தொடர்ந்து ஒரு வறட்டுத் தன்மை நிலவுகிறது. ஆழமான இலக்கியக் களம் தமிழில் இருக்கிறபோது, ஒரு தனிநபருக்கு வேறொரு தனிநபர் தந்த பட்டப் பெயர்கள் குறித்த கேள்விகள், எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடி யாதவை. அதே சமயம், சில வினாக்களில் நல்ல அறிவுசார்ந்த அணுகுமுறை தெரி கிறது. திருக்குறளில் இருந்து, ‘தீரா இடும் பைத் தருவது எது'? என்கிற கேள்வி - ஒரு நல்ல உதாரணம். குறள் கூறும் கருத்தை மையமாகக் கொண்ட இதுபோன்ற வினாக் கள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம்.

அரசனைக் குறிக்கும் ஓரெழுத்துச் சொல் எது? ‘வா' என்ற சொல்லின் பெயரெச்சம் என்ன?, உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது? தரப்பட்ட வரிசையில், பதினெண் கீழ்க்கணக்கு நூல் எது? போன்ற கேள்விகள் ஆனாலும் மிக எளிமையானவை. பட்டப் படிப்பு நிலைக்கு இவை சரியில்லை. ஓரிரு வினாக்கள் அப்படி இருக்கட்டும் என்று ஒருவேளை ஆணையம் கருதி இருந்தால், தவறில்லை. ‘ஜீவனாம்சம்' நூல், ‘முள்ளும் ரோஜா வும்' சிறுகதை; ‘வேலி' சிறுகதை ஆகிய வற்றின் ஆசிரியர்கள் பெயர், ‘சுபாஷா பிமானம்' என்கிற வடசொல்லின் பொருள் (தாய்மொழிப்பற்று) ஆகியன, இப்பகுதி யின் இனிய வியப்புகள்.

பொதுப்பாடப் பகுதியில் எளிமையான, கடுமையான வினாக்கள் சம அளவில் இருப்பதாகவே தோன்றுகிறது. கணிதப் பகுதியில், கனமூலம், பின்ன எண்களின் மதிப்பைக் கண்டறிதல் போன்ற பகுதிகள் கடினம்தான். அதே சமயம், சராசரி, தனி வட்டி, கூட்டு வட்டி, வேலையாள் - வேலை நேரம் - வேலைக்கான ஊதியம் ஆகிய கேள்விகளில், கிராமப்புறத் தேர்வர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு வகுப்பில் 4:5 விகிதத்தில் மாணவர்கள், மாணவிகள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில், மாணவிகள் எத்தனை பேர்..? 2 ஆண்டு முடிவில் தனி வட்டி, கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசம்; வட்ட விளக்கப் படத்தில் இருந்து எண்ணிக்கை கண்டுபிடித்தல் ஆகியன, தேர்வர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்து இருக்கும்.

புத்திசாலித்தனமான கேள்விகள் ஆங் காங்கே தலை காட்டுகின்றன. ‘ஒரு கிலோ கிராமில் ஐந்து கிராம் - எத்தனை சதவீதம்?' ஒருவர், இரண்டு கைக்கடிகாரங்கள் வைத் திருக்கிறார். ஒவ்வொன்றையும் ரூ.594-க்கு விற்கிறார். ஒன்றில் 10% லாபம்; மற்றதில் 10% நஷ்டம். மொத்தத்தில் அவருக்கு லாபம் (அ) நஷ்டம் எவ்வளவு?.. இந்த முறை, இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான வினாக்கள் இடம் பெற்றுள்ளன. தில்லை யாடி வள்ளியம்மை பற்றி காந்தியடிகள், புலித் தேவருக்கு ஆதரவு தந்தவர்கள் யார்.. பாரதியார் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது... என்று சற்றே வித்தியாசமான கோணத்தில் கேள்விகள் அமைந்துள்ளன.

யவணர்களின் வணிகப் பொருட்கள், கபிலரை ஆதரித்துப் போற்றிய சிற்றரசர் (பொது அறிவுப் பகுதியில்), சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கபட்ட ஆண்டு, திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்று பல நூற்றாண்டுகளில் பயணிப்பது, நன்றாகவே இருக்கிறது. கங்கை - யமுனை சங்கமிக்கும் இடம், சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட் டுள்ள அணை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு உள்ளிட்ட வழக்கமான கேள்விகள் உள்ளன. சூழ் நிலை இயலில் ஆற்றலின் முக்கிய ஆதாரம்... அமில மழையில் உள்ள ரசாயனப் பொருள், பித்தளையில் உள்ள உலோகக் கலவை, ‘போட்டோட்ராப்பிஸம்', ‘கடல் புகை', ஹம்போல்ட் நீரோட்டம்... என்று, இப்பகுதியின் கடினமான கேள்விகள் மிகத் தரமானதாகவும் இருக்கின்றன.

‘நடப்பு நிகழ்வுகள்' பகுதி, மிகச் சரியாகக் கையாளப்பட்டுள்ளது.முதல் உயிரி-எரிபொருள் விமானம் (bio-fuel flight) எந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது? 2018 பருவமழையில் எந்த மாநில மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்? உலகின் முதல் Block chain பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி எது? பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பிரச்சாரம்... மெட்ரோ ரெயில் சேவை... என்று பல துறை களைத் தொட்டுச் செல்கிறது இப்பகுதி.

அரசுத் திட்டங்கள் சார்ந்த வினாக்கள் ‘யு.பி.எஸ்.சி.'யை ஒட்டியே அமைந்து இருக்கின்றன. ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டம், தங்கக் கை குலுக்கும் திட்டம், 2017-18 நிதி நிலை அறிக்கையில் மூத்த குடிமக்களுக்கு அறிவிக்கப்பட்ட வசதி,தொலைதூரப் பகுதிகளில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முகமையாக அறிவிக்கப்பட்ட அலுவலகம் (தபால் நிலையம்) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்... எல்லாமே மைய அரசின் திட்டங்கள்தாம்.

அரசமைப்பு சட்டத்தில் இன்னமும் ஆழமாகச் சென்று இருக்கலாம். ‘அடிப் படைக் கடமைகள், சட்டத்தின் எத்தனையாவது பாகம்?' என்கிற வினா மட்டும் சற்று பரவா யில்லை ரகம். கருமைப் புரட்சி, ஜி.எஸ்.டி. ஆகியனவும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உணவு தானியங்கள் அதிகம் உற்பத்தி ஆகும் மாவட்டம் எது என்கிற கேள்வியில், நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. அதிகம் விளையும் மாவட்டம் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்குமே...? ஆங்கிலத்தில் ‘produce' இருப்பதால், தமிழில் ‘உற்பத்தி' வந்துள்ளது!

வினாத்தாள் முழுவதையும் பார்த்த பிறகு, ஒருவித மன நிறைவு வரத்தான் செய்கிறது. தமிழ் வழியில் பயின்ற கிராமப்புறத் தேர்வர்களுக்கு அரசுப் பணியில் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாகவே தென்படுகிறது. ஆணையம் நல்லது செய்து இருக்கிறது. வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x