

'கஜா' புயலுக்குப் பிறகு ஐந்து நாட்கள் கழித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 'கஜா' புயலாக மாறி கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
'கஜா' புயலினால் பாம்பனில் துறைமுகத்தில் கடந்த நவம்பர் 10-ம் தேதி அன்று ஒன்றாம் எண் புயல் கூண்டும், நவம்பர் 11-ம் தேதி அன்று இரண்டாம் எண் புயல் கூண்டும், நவம்பர் 15-ம் தேதி அதிகாலை மூன்றாம் எண் புயல் கூண்டும், அதே நாள் பிற்பகல் எட்டாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவில் 'கஜா' புயலின் மத்தியப் பகுதி நாகப்பட்டினம்- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்ததால் பாம்பனில் நவம்பர் 16-ம் தேதி மதியம் எட்டாம் எண் புயல் கூண்டு இறக்கப்பட்டது.
புயல் கூண்டு இறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் பின்னர் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல சனிக்கிழமை மீனவளத்துறையினர் அனுமதி டோக்கன் வழங்கினர். அனுமதி டோக்கனை பெற்றுக்கொண்டு ராமேசுவரம் மீன்பிடித் தளத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
மேலும் 'கஜா' புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாம்பன் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடற்பகுதிக்கு பாம்பன் தூக்குப் பாலத்தைக் கடந்து சென்றன.