

ஸ்மார்ட் போன் மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை கஞ்சனூர் அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதினர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார நிறுவனம், விபா நிறுவனம், என்சிஇஆர்டி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை நடத்தி வருகின்றன. அறிவியல் மனப்பான்மையை, மாணவர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 3 தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இத்தேர்வினை எழுதினர். கஞ்சனூர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திலேயே அப்பள்ளியை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் 25 மாணவ, மாணவிகள் ஸ்மார்ட் போன் வழியாக தேர்வை எழுதினர்.
தேர்வு கண்காணிப்பாளராக சத்யகுமார் செயல்பட்டார். மேற்பார்வையாளராக பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சந்தோஷ், ஆசிரியர் கார்த்தி ஆகியோர் செயல்பட்டனர். இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறும் போது, ‘‘இத்தேர்வை, மாவட்டத்திலேயே கஞ்சனூர் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் முறையாக ஸ்மார்ட் போன் வழியாக எழுதி உள்ளனர்.
மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்,’’ என்றனர்.