Published : 22 Nov 2018 08:45 PM
Last Updated : 22 Nov 2018 08:45 PM

ரேஷன் அரிசி யாருக்கு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும், அவர்களுக்கு மட்டுமே ரேஷனில் இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும் செலவு குறித்தும் நவம்பர் 30-ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட அமர்நாத் என்பவரை  அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேலூர் மாவட்ட ஆட்சியர்  கடந்த ஆக.31 அன்று உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அமர்நாத்தின் மனைவி சவ்ஜன்யா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்திருந்த  நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்வது மன்னிக்க முடியாத குற்றச்செயல் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது? ஒரு ஆண்டுக்கு கொடுக்கப்படும் இலவச அரிசியின் மதிப்பு எவ்வளவு? பொதுமக்களுக்கு அனுப்பப்படும் இலவச அரிசியில் முறைகேடு செய்ததாக எத்தனை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?

 ரேசன் அரிசி முறையாக விநியோகிக்கபடுகிறதா அல்லது கையாடல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்பி அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு அறிக்கையில் 2017-ம் ஆண்டு இலவச அரிசி திட்டத்திற்காக 2110 கோடி ரூபாய் செலவிடப்படுள்ளதாகவும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 31 அரசு ஊழியர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ஏழை மக்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தப்படுவதால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இலவச அரிசிக்காக செலவிடப்பட்ட 2110 கோடி ரூபாயை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட்டிருந்தால், பொதுமக்கள் நீண்டகால பலனடைந்திருப்பார்கள் என தெரிவித்தனர்.

தேர்தல் லாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு தமிழகத்தை ஆளும் அரசுகள்  தள்ளிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி இனி வரும் காலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும், அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும் செலவு குறித்தும் நவம்பர் 30-ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x