கூவம் அடையாறு பராபரிப்பு தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ. 2 கோடி அபராதம்: உயர் நீதிமன்றம் தடை

கூவம் அடையாறு பராபரிப்பு தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ. 2 கோடி அபராதம்: உயர் நீதிமன்றம் தடை
Updated on
1 min read

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் பராமரிப்பில் சுணக்கம் காட்டிய தமிழக அரசுக்கு பசுமைதீர்ப்பாயம் விதித்த ரூ.2 கோடி அபராதத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றை முறையாக பராமரிப்பது தொடர்பாக ஜவஹர்லால் சண்முகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் 26300 ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில், 408 ஆக்கிரமிபுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக மற்ற ஆக்கிரமிபுகளை அகற்ற முடியவில்லை என தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், இந்த வழக்கில் தமிழக பொதுப்பணித்துறை முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் மெத்தனப்போக்கை கையாண்டு வருவதாக கூறி 2 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் 2 கோடி ரூபாயை 15 நாட்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டுமென கடந்த அக்டோபர் 31-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த இரண்டு கோடி ரூபாய் அபராதத்தை எதிர்த்து பொதுப்பணித் துறை செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்திற்காகவும், கேட்ட விவரங்களை அளிக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பது தவறானது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் அனைத்து விவரங்களையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், அதிகபட்சமாக விதிக்கப்பட்ட இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதிகள், இரண்டு கோடி ரூபாய் அபராதத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனு குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரரான ஜவஹர்லால் சண்முகம் 4 வாரத்தில் பதில் அளிக்கவும்  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in