விவசாயியை அடித்துக் கொன்ற சிறுத்தை திம்பம் காட்டில் மீண்டும் பீதி

விவசாயியை அடித்துக் கொன்ற சிறுத்தை  திம்பம் காட்டில் மீண்டும் பீதி
Updated on
1 min read

மேற்குத்தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட திம்பம் காட்டுப் பகுதியில் விவசாயியை சிறுத்தை அடித்துக் கொன்றதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது திம்பம். பண்ணாரியில் இருந்து திம்பத்துக்கு செல்ல 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 24, 26 மற்றும் 17-வது கொண்டை ஊசி வளைவுகளில் பல தடவை வாகன ஓட்டிகள் சிறுத்தைகள் நடமாட்டத்தை நேரில் பார்த்துள்ளனர். தாளவாடியைச் சேர்ந்த வேன் டிரைவர் முகமது இலியாஸ், திம்பம் செக்போஸ்டில் பணியில் இருந்த வனக்காப்பாளர் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை சிறுத்தை அடுத்தடுத்து அடித்துக் கொன்று உடலையும் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டி கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே 2 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க வன அதிகாரிகள் 4 கூண்டுகள் அமைத்தனர். ஒரு கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட அந்த சிறுத்தை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்கொல்லி சிறுத்தை பிடிபட்டதால் திம்பம் பகுதியில் உள்ள மக்களும், ரோட் டோரம் டீக்கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் சுற்றுலாப் பயணி களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

ஆனால், சிறுத்தை பிடிபட்ட 4 தினங்களிலேயே திம்பம் பகுதியில் ரோட்டோரம் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தை வாகன ஓட்டிகளும், வன ஊழியர்களும் பார்த்து உள்ளனர். முன்பு பிடிபட்ட சிறுத்தை ஆள்கொல்லிதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், தற்போது மீண்டும் விவசாயியை தாக்கி சிறுத்தை கொன்றுள்ளது.

சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பத்தை அடுத்த காளி திம்பத்தை சேர்ந்தவர் ரேசன் (40). இவரது பசு காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. மாலையில் வீடு திரும்பாததால், ரேசன் மாட்டை தேடி நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் சென்றார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்து கழுத்தை கடித்து ரத்தம் குடித்துள்ளது. இதனால் ரேசன் இறந்தார்.

இந்நிலையில், ரேசன் தேடி சென்ற பசு வீட்டுக்கு திரும்பிவிட்டது. ரேசன் திரும்பி வராததால் பொதுமக்கள் காட்டுப்பகுதிக்குச் சென்று தேடினர். அப்போது ரேசன் சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்துகிடப்பது தெரிந்தது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஹாசனூர் போலீ ஸார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

சிறுத்தை தாக்கி பலியான ரேசனுக்கு மனைவி, 3 பெண், 2 ஆண் என 5 குழந்தைகள் உள்ளனர். ஆட்களை அடித்து கொன்று ரத்தம் உறிஞ்சி குடிக்கும் சிறுத்தை நடமாட்டத்தால் மலை கிராம மக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in