Published : 20 Nov 2018 01:11 PM
Last Updated : 20 Nov 2018 01:11 PM

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம்

தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டணை பெற்று சிறையில் இருந்து அதிமுகவினர் மூவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி அட்வகேட் ஜெனரல் விளக்கம் பெற்று அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களை அதிர்ச் சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, தருமபுரி நகர முன்னாள் அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 24 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனையை எதிர்த்து 3 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூக்கு தண்ட னையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக் கும் தண்டனை கைதிகளில் சுமார் 1,800 பேர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

தண்டனைக் காலத்துக்கு முன்பே கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. அவரின் ஒப்புதலின்படியே அனைத்து கைதி களும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்துக்கு பரிந்துரை செய்யப் பட்டது. ஆனால், அந்த பரிந் துரையை அவர் நிராகரித்து விட்டார்.

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆளுநருக்கு தமிழக அரசு மனு அளித்தது. அதில், ‘பேருந்து எரிப்பு சம்பவம் திட்ட மிட்டு நடந்ததல்ல, உணர்ச்சி வசப்பட்டு நடந்தது என்பதால் நல்லெண்ண அடிப்படையில் 3 பேரையும் விடுவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், 3 பேரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, வேலூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப் படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது. அதன்பேரில் 3 பேரும் நேற்றே விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் மூன்று பேரையும் விடுவித்தது குறித்து ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து விளக்கம் அளித்து இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இதில் கைதிகளை அரசியல் சட்டம் 161 பிரிவின்படி விடுதலை செய்வதற்கான ஒப்புதலை பெற தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதை பரிசீலனை செய்த ஆளுநர் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் என்பது சட்டப்படியாக இருக்காது என்பதால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதற்காக உத்தரவை பிறப்பித்தார். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூவரையும் விடுவிப்பது தொடர்பான தனித்தனி பரிந்துரையை சிறைத்துறை டிஜிபி தலைமையிலான கமிட்டி அளித்து, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் அடங்கிய குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனை சட்டத்துறை அமைச்சரும், முதல்வரும் ஏற்றுக் கொண்ட பிறகே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசியல் சட்டம் 161வது பிரிவின் கீழ் 1627 கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசு அளித்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

அதேசமயம் ஆயுள் தண்டனை பெற்ற மூவரின் விடுதலை தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பியனுப்பியது. எனினும் மாநில அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்து ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. இதுமட்டுமின்றி அக்டோபர் 25-ம் தேதி அன்று பரிந்துரைகளை மாநில அரசு மீண்டும் அனுப்பியது. மேலும், அட்வகேட் ஜெனரல் மற்றும் தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் ஆகியோர் ராஜ்பவனில் 31-ம் தேதி ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

பேருந்துக்கு தீ வைத்தபோது மூன்று பேருக்கும் யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்ற விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி பரிசீலனை செய்து  தனது பரிந்துரையை அளிக்க வேண்டும் என அட்வகேட் ஜெனரலிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். 

அதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் 2016-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி அளித்த தீர்ப்பை ஆய்வு செய்ததாகவும், அதில் அரசியல் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் நோக்குடன் இவர்கள் பேருந்துக்கு தீ வைத்ததையும், அதில் அப்பாவி கல்லூரி மாணவிகள் மூன்று பேர் சிக்கி உயிரிழந்ததையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக அட்வகேட் ஜெனரல் அளித்த பரிந்துரையில் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த மூன்று பேரும் கொலையாளிகளுக்கு முன்கூட்டியே தெரியாத நபர்கள் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் அவர்களுக்கு இல்லை என்றும், இதற்கான திட்டமிடல் எதுவும் இல்லை, எல்லாமே அடுத்த கணநேரத்தில் நடந்த மிக மோசமான சம்பவம் மட்டுமே என்பது உச்ச நீதமின்ற தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் தனது விளக்கத்தில் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இவர்கள் மூன்று பேரையும் விடுவிப்பது விதிமுறையின்படியே என்ற  அட்வகேட் ஜெனரல் அளித்த அறிக்கை ஏற்று அதனை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், சட்ட அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்ட்டது.

அவர்கள் மூன்று பேரையும் விடுவிப்பது தொடர்பாக நவம்பர் 11ம் தேதி மூன்றாவது முறையாக கோப்பு அனுப்பட்டபோதும் கூட ஆளுநர் உடனடியாக திருப்தி அடையவில்லை. அவர்களை விடுவிப்பதால் ஏற்படும் சூழலை ஆய்வு செய்ததுடன், மூவரும் 13 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு  பிறகே விடுக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்

இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x