

அதிமுகவினர் 3 பேரை விடுவிக்கவே 7 பேர் விடுதலை குறித்து அதிமுக முயற்சி எடுப்பதுபோல் நடித்தது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்
உயர் நீதிமன்ற நீதிபதியாக புகழேந்தி பதவியேற்ற விழாவில் கலந்துகொண்ட பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நீதிபதி புகழேந்தி பதவியேற்ற இந்த நாள் திராவிட இயக்கத்தின் சமூக நீதி நாள். 7 பேர் 27 ஆண்டுகள் நரக வேதனை அனுபவித்தனர். நீதிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தமிழக சரித்திரத்தில் இவ்வளவு மோசமான ஆளுநரைச் சந்தித்தது இல்லை. மோடியின் ஏஜெண்டாக செயல்படுகிறார் ஆளுநர்.
அதிமுகவினர் மூன்று பேரை விடுதலை செய்யவே 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு நாடகம் நடத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து எரிப்பில் மூன்று பேரை விடுதலை செய்ய ஆளுநர் அனுமதி வழங்கினார். ஆனால் குற்றமே செய்யாமல் 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுபவர்களை ஏன் விடுதலை செய்யவில்லை? அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் யாரையும் கேட்க வேண்டியதில்லை. எங்கள் கட்சிப் பணம் 75 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய மத்திய அரசு மற்றும் ஆளுநர் செய்வது அக்கிரமம். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்''.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
ஏழு பேர் விடுதலை கோரி, நவம்பர் 24-ம் தேதி சென்னையில் மதிமுக போராட்டம் நடத்தும் என வைகோ தெரிவித்தார்.