புதுச்சேரியில் இரட்டைக் கொலை: முதல்வர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரியில் இரட்டைக் கொலை: முதல்வர் நாராயணசாமி நேரில் ஆய்வு
Updated on
1 min read

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொகுதியான அண்ணா நகரில் வசித்து வந்த கணவன் மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் புதுச்சேரியில் கொலை சம்பவம் ஆரம்பித்துள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொகுதியான அண்ணா நகர் 14-வது தெருவில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் (72) மற்றும் அவரது மனைவி ஹேமலதா (68) ஆகிய இருவரும் தனியாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவு கீழ் தளத்தில் வசித்து வந்த இருவரையும் மர்ம நபர்கள்  தலையணையால் முகத்தில் அழுத்தி இருவரையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். அதிகாலையில் வழக்கறிஞரின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ள உருளையன் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் இருவரின் உடலைக் கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இக்கொலை சம்பவமானது நகை மற்றும் பணத்திற்காக நடைபெறவில்லை எனவும், வீட்டில் இருந்த எதையோ கொலையாளிகள் தேடியுள்ளதாகவும் அது கிடைக்கவில்லை என்பதால் கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றுள்ளதாகவும் வீட்டிலிருந்த வெள்ளிப் பொருட்கள் அப்படியே உள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் தொகுதியில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதால் முதல்வர் நாராயணசாமி நேரிடையாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க அவரவர் சிசி டிவி கேமராக்கள் வீடுகளில் பொருத்த வேண்டும். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுவரை புதுச்சேரியில் கொலை சம்பவம் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் ஆரம்பித்துள்ளது. இந்தக் கொலை பணம் நகைக்காக நடைபெற்றுள்ளதா அல்லது வேறு எதேனும்  பின்புலம் இருக்கிறா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்த காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்'' என்று நாராயணசமை தெரிவித்தார்.

கொலையான இருவரும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் தேனி ஜெயக்குமாரின் உறவினர்கள் என்பது குறிப்பிடதக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in