புதுச்சேரியில் பாஜக முழு அடைப்புப் போராட்டம்: 30 வாகனங்கள் கண்ணாடி உடைப்பு; கடைகள் மூடல்

புதுச்சேரியில் பாஜக முழு அடைப்புப் போராட்டம்: 30 வாகனங்கள் கண்ணாடி உடைப்பு; கடைகள் மூடல்
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து  புதுச்சேரியில் பாஜகவினர் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் 11 தமிழக மற்றும் தனியார் பேருந்து உட்பட 30 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் இதுவரை 49 பேர் வரை கைதானதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அரசு ஓட்டுநர்கள் ஹெல்மெட் போட்டு பஸ்களை இயக்கினர்.சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக கேரள கம்யூனிஸ்ட் அரசு செயல்படுவதாக கூறி, இன்று புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழக, புதுச்சேரி அரசு பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுபாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போ போன்றவை இயங்குகின்றன.

முழு அடைப்புப் போராட்டம் அறிவிப்பையடுத்து நேற்றைய தினமே பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இயக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையிலும் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை, அரசு பள்ளிகள் இயங்கின.

தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படாததால் கிராமப்புறங்களில் இருந்து அரசு பள்ளிக்கு வரமுடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதேபோல் கடைகள் பெரும்பாலும் தற்போது வரை திறக்கப்படவில்லை.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நகரின் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள் வழக்கம் போல் இயங்கின.

பஸ் மீது கல்வீச்சு:

போராட்டத்தால்  11 தமிழக மற்றும் தனியார் பேருந்து உட்பட 30 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் தற்போது வரை 49 பேர் வரை கைது செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் குறிப்பிட்டனர்.திண்டிவனம் நோக்கி செல்லும் பேருந்தில் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அரசு பேருந்தில் ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in