Published : 17 Nov 2018 03:17 PM
Last Updated : 17 Nov 2018 03:17 PM

கஜா புயல் காற்றின் வேகத்தால் திருச்சியில் 10 மணிநேரம் விமான சேவை முடங்கியது

கஜா புயல் காற்றின் வேகத்தால் திருச்சி விமானநிலையத்தில் 10 மணிநேரம் விமானசேவை முடங்கியது.

கஜா புயல் காரணமாக திருச்சி விமானநிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. விமானநிலைய வளாகம், குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.

எனினும் இங்கிருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. அதன்பின் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 100 கி.மீ வேகத்தைத் தாண்டியதால், இங்கு விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், சார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் தரையிறங்க முடியாமல், கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, சென்னையில் புறப்பட்டு காலை 6.15 மணிக்கு திருச்சியில் தரையிறங்குவதற்காக வந்த இன்டிகோ நிறுவன விமானம், மோசமான வானிலையால் மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

மலேசியாவில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 8.55 மணிக்கு திருச்சி வர வேண்டிய ஏர் ஏசியா விமானமும் பாதி வழியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொச்சியிலிருந்து திருச்சி புறப்பட்ட இன்டிகோ விமானமும் பாதி வழியில் கொச்சிக்கே திரும்பிச் சென்றது.

இதுதவிர, திருச்சி - பெங்களூரு, பெங்களூரு - திருச்சி, திருச்சி - சென்னை, சென்னை - திருச்சி இடையேயான அலையன்ஸ் ஏர், இன்டிகோ நிறுவனங்களின் விமான சேவைகளிலும் மோசமான வானிலை காரணமாக பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், இலங்கையிலிருந்து காலை 9 மணிக்கு திருச்சிக்கு வர வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் இயக்கப்படாமல், கொழும்பு விமானநிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, கஜா புயல் திருச்சியைக் கடந்துவிட்டதால் காலை 11.30 மணிக்கு மேல் விமானநிலைய பகுதியில் காற்றின் வேகம் வெகுவாக குறைந்தது. அதைத்தொடர்ந்து, இங்கிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கியது. மலேசியாவில் இருந்து வந்தபோது அதிகாலையில் திருப்பிவிடப்பட்டு, சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் ஏசியா விமானம் காலை 11.45 மணிக்கு திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியது.

அதைத்தொடர்ந்து, கொச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்ட இன்டிகோ விமானம் பகல் 12.55 மணிக்கும், சார்ஜாவில் இருந்து வந்தபோது கொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 3.45 மணிக்கும் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கின. இதேபோல திருச்சி - சென்னை, திருச்சி - கொச்சி, திருச்சி - பெங்களூரு வழித்தடங்களில் வழக்கம்போல மீண்டும் விமானசேவை தொடங்கியது.

நேற்று அதிகாலை 2 மணிக்கு பிறகு, நண்பகல் 11.45 மணி வரை திருச்சி விமானநிலையத்தில் விமான சேவைகள் முடங்கியதால் அவற்றில் பயணம் செய்ய வந்தவர்களும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x