

ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய 'கஜா' புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த தென்னை மரங்கள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரிலான வாழை மரங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்ததபடி, அரசு பேருந்துகளில் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எழுதிய கடிதத்தில், "சமீபத்தில் ஏற்பட்ட 'கஜா' புயலால் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 4 கடலோர மாவட்டங்கள் முழுமையாகவும், மற்ற மாவட்டங்கள் அதிகளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்டோர் இப்புயலால் உயிரிழந்தனர்.
மக்கள் தங்களது வீடுகள், வாழ்வாதாரங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
ஆகவே, ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என ரயில்வே துறையை வலியுறுத்துகிறேன். கேரள மழை வெள்ளத்தின் போதும் இதேபோன்ற நடவடிக்கையை ரயில்வே துறை மேற்கொண்டதை சுட்டிக்காட்டுகிறேன்" என முதல்வர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.