கடற்கரைச் சாலையில் அரசுப்பேருந்து மோதல்: சொகுசு கார் திடீர் பிரேக் போட்டதால் விபத்து: பேருந்து ஓட்டுநர் காயம்

கடற்கரைச் சாலையில் அரசுப்பேருந்து மோதல்: சொகுசு கார் திடீர் பிரேக் போட்டதால் விபத்து: பேருந்து ஓட்டுநர் காயம்
Updated on
1 min read

கடற்கரைச்சாலையில் சொகுசு கார், பேருந்தின் குறுக்கே புகுந்ததால் மோதலைத் தவிர்க்க முயன்றபோது பிளாட்பார தடுப்பில் பேருந்து மோதி சேதமானது. இதில்  பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார்.

சென்னை பிராட்வேயிலிருந்து ஓஎம்ஆர் சாலை நோக்கி சென்னை மாநகர பேருந்து தடம் எண் 109 எஸ் இன்று மதியம் கிளம்பியது. பேருந்தை திண்டிவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முகுந்தன் (41) என்பவர் ஓட்டிச்சென்றார்.

பேருந்து கடற்கரைச்சாலையில் விவேகானந்தர் இல்லம் வழியாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்புறம் திடீரென புகுந்த கார் வேகத்தை குறைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் முகுந்தன் பேருந்தை கார் மீது மோதிவிடாமல் இருக்க இடது பக்கம் திருப்ப பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் பேருந்து சாலையின் இடதுபுறம் பிளாட்பாரத்தின் தடுப்பு கம்பிகள் மீது மோதியது. தடுப்புக்கம்பிகளை தாங்கிப்பிடிக்கும் கற்சுவர் மீது மோதியதில் பேருந்தின் முன்பாகம் பலத்த சேதமடைந்தது. இதில் பேருந்தின் ஸ்டியரிங் குத்தியதில் ஓட்டுநர் முகுந்தன் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக அப்போது இருசக்கர வாகனங்களோ, பாதசாரிகளோ இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

முகுந்தன் சிகிச்சைக்காக அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in