Published : 10 Nov 2018 04:54 PM
Last Updated : 10 Nov 2018 04:54 PM

எந்த புது தோசையையும் சுடவில்லை: ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பைக் கிண்டல் செய்த தமிழிசை

எதிரணி என்கிற எந்த புது தோசையையும்  சுடவில்லை என்று ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பைத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். அதேபோல நேற்று (வெள்ளிக்கிழமை) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தர்ராஜன், ''சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்தித்துவிட்டார், அதற்கு முன்னால் தேவகவுடாவைச் சந்தித்துவிட்டார், ராகுலைச் சந்தித்துவிட்டார். மிகப்பெரிய கூட்டணியை அமைத்துவிட்டார் என்கின்றனர். எந்த புது தோசையையும் சுடவில்லை. ஏற்கெனவே எதிரணியாக இருக்கும் ஒருதோசையை பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறார். அவ்வளவுதான்.

4 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தவர் வரவு செலவுக்காக புதுக் கூட்டணி தேடி வருகிறார். ஏற்கெனவே பழக்கப்பட்ட 4 ஆண்டுகள் சாப்பிட்டு விட்டு , பிடிக்கவில்லை என சொல்லி புது ஓட்டல் தேடுகிறார். ஒரு டீக்கடையில் பாக்கி வைத்துவிட்டு அடுத்த டீக்கடைக்கு போவதைப்போல். ஸ்டாலின் மகிழ ஒன்றுமில்லை.

ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறேன், பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பவர்களை எதிர்க்கிறேன் என்று சொல்கிறார் சந்திரபாபு நாயுடு. அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனநாயகத்தைக் கொன்று பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் இருந்துகொண்டு சொல்வதுதான் மிகப்பெரிய வேடிக்கை'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x