

பட்டுக்கோட்டை அருகே, பருவமடைந்ததால் தென்னந் தோப்பில் இருந்த குடிசை வீட்டில் தனியாக தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி, 15-ம் தேதி நள்ளிரவு சுழன்றடித்த கஜா புயலில் தென்னை மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டாவின் கடற்கரையோர மாவட்டங்களில் பெரும் சேதம் எற்பட்டது. புயலால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மரங்கள் விழுந்து, சாலைகள், மின் இணைப்புகள், செல்போன் கோபுரங்கள் சேதமடைந்ததால் கிராமங்கள் தனித் தனி தீவுகளாகியுள்ளன.
இந்தப் புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியின் மரணம் கேட்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ் (60). இவர், அங்குள்ள தென்னந் தோப்பில் கூரை வீடு அமைத்து, குடும்பத்துடன் தங்கி, தோப்பில் வேலை செய்து வருகிறார். 7-ம் வகுப்பு படித்து வந்த இவரது 13 வயது மகள் சமீபத்தில் பூப்பெய்தியுள்ளார்.
அதற்கான சடங்குகளை செய்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், தீட்டு காரணமாக, அதே தோப்பில் சற்றுத் தொலைவில் இருந்த குடிசையில் அந்தப் பெண்ணை தனியாக தங்க வைத்துள்ளனர். இரவில் துணைக்கு தாயார் உடனிருந்துள்ளார். தென்னந் தோப்பில் அருகில் வீடுகளே இல்லாத இருள் சூழ்ந்த, நவ.15-ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் பெரும் சத்தத்துடன் சுழன்றடித்த புயல் காற்றால், சுற்றியிருந்த தென்னை மரங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்துள்ளன. அப்போது, குடிசை வீட்டின் மீதும் தென்னை மரங்கள் விழுந்தன. உதவிக்காக இவர் எழுப்பிய கூக்குரல் சூறாவளிக் காற்றில் அமிழ்ந்து போனது.
மறுநாள் காலையில் புயல் ஓய்ந்து, பொழுது விடிந்த போதே, சிறுமியும் தாயும் தங்கியிருந்த குடிசை வீட்டின் மீதும் மரங்கள் விழுந்திருந்ததை அறிந்த செல்வராஜ், அருகில் உள்ளவர்களின் உதவியுடன், மரங்களை அகற்றி மகளை சடலமாக மீட்டுள்ளார். சாலைகளில் மரங்கள் விழுந்து கிடந்ததால் சுமார் 20 மணிநேரம் கழித்து, தோளில் சுமந்தே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காலில் பலத்தக் காயமடைந்த சிறுமியின் தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புயலால் அப்பகுதியில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டதால், இந்த துயரம், அருகில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாத நிலை இருந்துள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறுமியின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்களின் மூடநம்பிக்கையால் ஏற்பட்ட இளம் சிறுமியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.