

மேடவாக்கம் அருகே கழிவுநீர் லாரி மோதியதில் பைக்கில் சென்ற மாணவனும் மாணவியும் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
சென்னை மேடவாக்கம் ஜல்லடி யன்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் அஸ்வின் (19). சேலை யூர் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பள்ளிக்கரணை இமானுவேல் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகிவந்தனர். பைக்கில் கல்லூரிக்குச் செல்லும் அஸ்வின் எப்போதாவது பாக்கியலட்சுமியை பள்ளியில் விடுவது வழக்கம்.
அஸ்வினுக்கு சனிக்கிழமை பிறந்த நாள். இதையொட்டி கோயிலுக்குப் புறப்பட்ட அவர், பாக்கியலட்சுமியை யும் உடன் அழைத்துக்கொண்டு பைக்கில் சென்றார். காலை 9.30 மணி அளவில் மேடவாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலையில் வீரபத்திரா நகர் அருகே சென்றபோது கழிவுநீர் லாரி ஒன்று அருகே சென்றுள்ளது. பைக்கும் லாரியும் போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக பைக் மீது லாரி இடித்தது. பைக் நிலைதடுமாறியதால், அஸ்வினும் பாக்கியலட்சுமியும் கீழே விழுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. தலை நசுங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் வாகனங்களில் சென்றவர்களும் உடனே ஓடிவந்தனர். கூட்டம் கூடியதால் பயந்துபோன ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் கிடைத்து பரங்கிமலை போக்குவரத்து போலீஸார் விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப் பினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து ஏற்படுத்தும் லாரிகள்
தொடர்கதையாகும் விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் லாரிகள், கழிவுநீர் லாரிகள் அதிகம் செல்கின்றன.
லாரிகளை ஓட்டுநர்கள் கண்மூடித்தனமாக ஓட்டுவதால் தினமும் 3 அல்லது 4 விபத்துகள் நிகழ்கின்றன. ஒரு சில விபத்துகளில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த 8 மாதத்துக்கு முன்பு மேடவாக்கம் சாலையில் வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் பைக்கில் தாயுடன் கல்லூரிக்குச் சென்ற சுகன்யா (19) என்ற மாணவி பரிதாபமாக இறந்தார். தற்போது 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த பகுதியில் லாரிகளால் விபத்துகளும், உயிரிழப்பும் தொடர்கதையாக இருக்கிறது. போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.
லாரிகள் திரும்ப வசதியாக சாலை யில் தேவையில்லாத இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்துகளுக்கு இந்த தடுப்புகளும் முக்கிய காரணம்.
இவ்வாறு அப்பகுதியினர் கூறினர்.