Published : 29 Aug 2014 12:00 AM
Last Updated : 29 Aug 2014 12:00 AM

கண்ணில் இருந்து ‘மண்’ கொட்டும் சிறுமிக்கு தீவிர சிகிச்சை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கண்ணில் இருந்து ‘மண்’ கொட்டும் சிறுமிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவால், சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். அவரது மகள் யுவராணி (12). ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக அந்த சிறுமியின் கண்ணில் கண்ணீர் வரும்போது மண் போன்ற பொருளும் வந்தது. அவளது பெற்றோர் கண் மருத்துவர்க ளிடம் அழைத்துச் சென்றனர். கண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எவ்வித குறையும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஆனால், சிறுமியின் கண்ணில் தொடர்ந்து மண் போன்ற பொருள் வந்து கொண்டே இருந்ததால் பெற்றோர் மனமுடைந்தனர். தங்கள் மகளுக்கு உதவி செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர். விஷயம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைந்து சிகிச்சை அளிக்குமாறும், தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார். தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அதற்கான செலவை அரசே ஏற்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

சிறப்பு மருத்துவக்குழு

இதையடுத்து, பொது சுகாதார இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி ஒரு சிறப்பு மருத்துவக் குழுவை சிறுமியின் கிராமத்துக்கு அனுப்பினார்.

டாக்டர்கள் பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய அந்த மருத்துவக் குழு சிறுமியின் கண்ணை பரிசோதித்தது.

பின்னர் சிறுமி அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டை யில் உள்ள உதி கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கண் சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x