Last Updated : 21 Nov, 2018 07:51 PM

Published : 21 Nov 2018 07:51 PM
Last Updated : 21 Nov 2018 07:51 PM

குக்கிராமங்களைச் சூறையாடிய கஜா புயல்:  எங்களிடம் ஒன்றுமேயில்லை... கண்ணீரில் நாகை கிராம மக்கள்

ஆர்.ஜெயபால் என்ற விவசாயத் தொழிலாளி தன் வாழ்க்கையில் 4 புயற்காற்று சேதங்களுக்குச் சாட்சியாகத் திகழ்கிறார். நாகப்பட்டிணம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர்தான் ஜெயபால். ஆனால் இவர் 4 புயல்களைப் பார்த்திருந்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தினால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.

“எங்களிடம் ஒன்றுமேயில்லை. எங்கள் வீடுகள் அனைத்தும் போய்விட்டன, முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீன் குழம்பு வைக்க புளி, மாங்காய் கூட இல்லை. அனைத்தும் போய் விட்டன. எனக்கும் வயதாகி விட்டது, இனி என் காலத்தில் புளியமரத்தையோ, மாமரத்தையோ நான் காணப்போவதில்லை” என்கிறார் ஜெயபால்.

அழிந்து போன குக்கிராமங்கள்:

வேளாங்கண்ணியிலிருந்து தலைஞாயிறு செல்லும் வழியெங்கும் மிகவும் மோசமான ஒரு சித்திரத்தையே கஜா புயல் விட்டுச் சென்றுள்ளது.  சடயங்கொட்டகம், கரபிடிகை, சிந்தாமணி, பலட்டங்கரை, ஏகராஜபுரம் போன்ற குக்கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. ஒரு மரம் கூட இங்கு இப்போது இல்லை. கஜாபுயல் சூறையாடிவிட்டது. இங்கு தற்போது தெரியும் காட்சி, சினிமா செட் ஒன்று உடைந்தது போன்ற காட்சி அல்லது, குண்டு வீசப்பட்ட பகுதியாகக் காட்சியளிக்கிறது.  “பலட்டங்கரை இருந்ததற்கான ஆதாரங்களே இல்லை” என்று கூறுகிறார் ஜெயபால்.

வேதாராண்யம் தாலுக்காவில் சிமெண்ட் கட்டிடங்கள் தவிர மற்றவையெல்லாம் புயலில் அழிந்துள்ளன. குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன, கூரை வீடுகளில் சிலவற்றில் வெறும் சுவர்கள் மட்டுமே உள்ளன.  தென்னை மரங்கள் விழுந்தே பல வீடுகள் நாசமாகியுள்ளன. கஜா வேகத்துக்கு செல்போன் கோபுரங்களும் சாய்ந்தன. கஜா வேகம் எப்படியென்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தது போக 2-3 துண்டுகளாக விழுந்துள்ளன. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்தனர்.பெண்கள் சாலையில் சமைக்கின்றனர். சிலர் இருப்பதை வைத்துக்கொண்டு கூரை வேய்ந்து தங்கள் வீடுகளை வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றி வருகின்றனர்.

கரப்பிடகையைச் சேர்ந்த என்.சங்கர் என்பவர் கூறும்போது, “தெரிந்த கிராமங்கள் மட்டுமே அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. கஜா புயல் எங்கள் வாழ்க்கையைப் புரட்டி போட்ட இரவிலிருந்து நாங்கள் இருளில்தான் இருந்து வருகிறோம். எங்களுக்குக் குடிநீர் இல்லை.  ஒருகிராமமே முகாமில் தங்கியுள்ளது” என்றார்.

இதில் வேதனை என்னவென்றால் யார் அதிகாரிகள் என்று அடையாளம் காண முடியாமல் அவ்வழியே செல்லும் வாகனங்களையெல்லாம் நிறுத்தி முறையிடும் அவலம் நடந்து வருகிறது.

தலைஞாயிறில் சந்தானம் தெருவில் உள்ள 170 வீடுகளில் 164 வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு வசிக்கும் விவசாயக் கூலிகள் 700 பேர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் முகாமில் தங்கியுள்ளனர்.

50 ஆண்டுகள் பின் சென்ற கிராமங்கள்:

தலைஞாயிறுவில் உள்ள சமூக ஆர்வலர் சோமு இளங்கோ கூறுகையில், “கஜா புயல் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு சென்று விட்டது. குடிசைகள் மட்டுமே இருந்த காலத்துக்குத் தலைஞாயிறு சென்றுவிட்டது.

ஒரு மூட்டை அரிசி நாளொன்றுக்கு ரூ.3000 என்பது 700 பேர்களுக்கு எப்படி போதும்? 3 வேளைக்கு எப்படி போதும்?

ஒவ்வொரு ஆண்டும் இயற்கைச் சீற்றத்துக்கு கிராமங்கல் பெரிய அடி வாங்குகின்றன, கஜாவுக்குப் பிறகு இவர்கள் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பப் போவதில்லை. முன்னாள் நாகப்பட்டிணம் எம்.எல்.ஏ. நாகை மாலி கூறும்போது, “முதலில் இவர்களுக்குத் தேவை கான்கிரீட் வீடுகள், இது தவிர வேறு எதுவும் இவர்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க உதவாது” என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x