முழுவீச்சில் புயல் சேத மதிப்பீட்டு பணி;முழுமையான நிவாரணம் முதல்வர் இன்று அறிவிப்பு: வதந்திகளை நம்ப வேண்டாம் என ஓபிஎஸ் அறிவுறுத்தல்

முழுவீச்சில் புயல் சேத மதிப்பீட்டு பணி;முழுமையான நிவாரணம் முதல்வர் இன்று அறிவிப்பு: வதந்திகளை நம்ப வேண்டாம் என ஓபிஎஸ் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், முதல்வர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முழுமையான நிவாரணம் அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. மரம் விழுந்த பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் மரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மின்கம்பங்கள், மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சீரமைப்புப் பணியில் 710 பொக்லைன் இயந்திரங்கள், 210 ஜெனரேட்டர்கள், 213 பவர் டில்லர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இதுவரை 15 ஆயிரத்து 820 லிட்டர் பால், 620 பால் பாக்கெட்கள், பால் பவுடர்கள் வழங்கப்பட்டுள்ளன.

216 ரேஷன் கடைகள் திறப்பு

216 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று நோய் ஏற்படாமல் இருக்க 105 மருத்துவக் குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாம்களின் அருகில் 36 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசரத் தேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மின் வாரிய ஊழியர்கள் 1200 பேர், ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் 1198 பேர்,  பேரூராட்சி ஊழியர்கள் 828 பேர், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் 955 பேர் உட்பட 6 ஆயிரம் ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழுதடைந்த 18 ஆயிரம் மின்கம்பங்களில் 7,955 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 520 மின்மாற்றிகள் சரி செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (19-ம் தேதி) முதல்வர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் முடிந்தவுடன் முழுமையான நிவாரணத்தை முதல்வர் அறிவிப்பார்.

வீடுகளில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு தலா 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சேதத்தை மதிப்பீடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தபின் நிதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். நிவாரணம் கிடைக்காது என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். மக்கள் அவற்றை நம்ப வேண்டாம். உரிய நிவாரணம் கட்டாயம் வழங்கப்படும் என்றார்.

அப்போது, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in