நாகையில் புயல் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாகையில் புயல் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Updated on
1 min read

'கஜா' புயலால் சேதமடைந்த நாகை மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

'கஜா' புயலால் நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நாகை வேதாரண்யம் அருகே புயல் கரை கடந்ததால் அதிக பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. புயல் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம் தரங்கம்பாடி, அக்கரைப்பேட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய இடங்களில் இன்று ஸ்டாலின் ஆய்வு நடத்தி மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி பெண்கள் ஸ்டாலினைப் பார்த்து கதறி அழுதனர். அவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  உள்ள மீனவ மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அங்கு துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும், துறைமுகம் அமைக்கப்பட்டால் இயற்கைச் சீற்றங்கள் குறையும் என அப்பகுதி மக்கள் ஸ்டாலினிடம் கூறினர்.

தொடர்ந்து மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார். முதலாவதாக தரங்கம்பாடி கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து அக்கரைப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட நாகை மாவட்ட பகுதிகளில் கடற்கரையோரப் பகுதிகளையும் பார்வையிட்டார்.

இதையடுத்து தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in