Last Updated : 30 Nov, 2018 02:34 PM

 

Published : 30 Nov 2018 02:34 PM
Last Updated : 30 Nov 2018 02:34 PM

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: மக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கச் சொல்லும் ஆய்வறிக்கை தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால். ஆலையைத் திறப்பதற்கு எதிராக மீண்டும் போராடுவோம் என்று தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஆய்வறிக்கை

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வந்த, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைக் கண்டித்து கடந்த மே மாதம் பொதுமக்கள் பிரமாண்ட போராட்டம் நடத்தினார்கள். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவசர அவசரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. இந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, அந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், மாசு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

கடந்த 26-ம் தேதி தருண் அகர்வால் குழுவினர் தங்களது அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றும், ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தப் பின்னணியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள். “ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையே மோசடியானது. நீதிமன்றத்தில் அது ரத்தாக வாய்ப்புள்ளது என்று மே.28-ம் தேதியே நாங்கள் சொன்னோம். முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்களும் அதையே சொன்னார்கள். ஆனால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரும், அதிமுக அமைச்சர்களும், “உச்ச நீதிமன்றம் அல்ல, உலக நீதிமன்றத்துக்கே போனாலும் ஸ்டெர்லைட்டைத் திறக்க முடியாது” என்றார்கள். ஆனால், நீதிபதி தருண் அகர்வால் குழு, தமிழக அரசின் அரசாணை இயற்கை நீதிக்கு எதிரானது. சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட்டைத் திறக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர். இதற்கு தமிழக அரசும், முதல்வர் பழனிசாமியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? தமிழக அரசுக்கு அந்தக் குழு வழங்கிய ஆய்வறிக்கையைக் கூட வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

“ஆய்வறிக்கை தவறு என்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த வரம்புகளை மீறி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நீதிபதி தருண் அகர்வால் குழு செயல்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட்டால் ஏற்பட்ட பாதிப்புகள், புற்றுநோய் உயிரிழப்புகள், மக்களின் அச்சம் குறித்தெல்லாம் எந்த ஆய்வும் நடத்தாமல், ஆலையைத் திறக்கலாம் என்று சொல்வது அப்பட்டமான ஒரு சார்பு நிலை. அரசாணை குறித்து ஆய்வு செய்யவா அந்தக் குழு அமைக்கப்பட்டது. அதுபற்றி முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம் தானே?” என்று பதில் கூறினார்கள்.

அடுத்து தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

“இந்த அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயமும், தமிழக அரசும் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்கச் சொல்லித்தான் உத்தரவு வரும் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. இந்தப் பிரச்சினையில் உளப்பூர்வமாக செயல்படாமல், தமிழக அரசு நாடகமாடுகிறது என்ற குற்றச்சாட்டையும் பதிவு செய்ய விரும்புகிறோம்”

உங்களது அடுத்த கட்ட செயல்பாடு என்ன?

“ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஜனநாயக முறையில் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தப்படும். இது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை மட்டுமல்ல என்பதை உணர்ந்து, தமிழக மக்கள், மாணவர்கள், அனைத்துக் கட்சியினர், இயக்கங்கள் எல்லாம் எங்களோடு இணைந்து இப்போராட்டத்தை மாநிலம் தழுவிய போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.

3 முக்கிய கோரிக்கைகளை இந்நேரத்தில் வலியுறுத்த விரும்புகிறோம்.

1. தமிழக அமைச்சரவை கூடி, “ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது” என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

2. ஆலைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கட்டிடம், தீயணைப்பு, தொழிற்சாலை உரிமங்கள் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

3. இதுதொடர்பான போராட்டத்தில் 14 பேர் உயிரிழப்பு, 273 வழக்குகள், 300க்கும் அதிகமானோர் கைதானது, பொதுச்சொத்துகள் நாசம், துறைமுகம் மூடல், இணைய சேவை முடக்கம் போன்ற சட்டம்- ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 133-ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்துவோம். அது ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் முழுவதும் பரவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x