

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான 'கஜா' புயல் நேற்றிரவு (நவ-15) 11.30 மணியளவில் வேதாரண்யம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடந்தது. அப்போது கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று பேயாட்டம் ஆடியது. கனமழையும் கொட்டித் தீர்த்தது.
சூறைக் காற்றால் பல பகுதிகளில் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன. கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந் தது. புயல் கரையைக் கடந்த போது கடும் சூறைக்காற்று வீசியது. 7 மாவட்டங்களிலும் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்களை அமைச்சர்களிடம் தொலைபேசி மூலம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.
'கஜா' புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார், மேலும், மின்சாரத்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகள் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார்.