

ரூ.1,350 கோடிக்கு அடமானம் வைக்கப்படவுள்ள பள்ளிக்கரணை இடம், சதுப்பு நிலம் அல்ல என உயர் நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ‘கலாமின் அக்னி சிறகுகள் அறக்கட்டளை’ செயலாளர் செந்தில்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘பள்ளிக்கரணையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலத்தை தனியார் ஐடி நிறுவனம் ஒன்று சட்ட விரோதமாக ஆவணங்கள் தயாரித்து அதன்மூலம் ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1,350 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்த பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், ‘சர்ச்சைக்குரிய நிலம் சதுப்பு நிலப்பகுதியில் வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அதை அடமானம் வைக்கவோ, பத்திரப்பதிவு செய்யவோ அல்லது தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடவோ கூடாது’ என இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாணைக்கு வந்தது. அப்போது தனியார் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அந்த நிலம் சதுப்பு நிலம் கிடையாது. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவருக்கு சொந்தமான தனியார் பட்டா நிலம். அவரிடம் இருந்தே அந்த நிலம் பெறப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. அதேபோல வனத்துறை தாக்கல் செய்திருந்த விரிவான பதில் மனுவில், ‘சர்ச்சைக்குரிய இந்த இடம் சதுப்பு நிலம் அல்ல’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையைப் படித்த நீதிபதி கள், ‘‘சைதாப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த இந்த நிலத்தின் ஆவணங்கள் மனுதாரருக்கு கிடைத்தது எப்படி, இந்த வழக்கின் பின் புலத்தை யும் ஆராய வேண்டி உள்ளது. கொடுங் கையூரில் உள்ள அறக்கட்டளைக் கும், பள்ளிக்கரணைக்கும் என்ன சம்பந்தம் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பது இன்னும் தொடர்கதையாகி வரு கிறது’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரர் தன்னுடைய அறக்கட்டளை தொடர்பான அனைத்து ஆவ ணங்கள், தற்போதைய வீட்டு முகவரி, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை வரும் டிச.10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.