

மேகேதாட்டு அணை கட்டுவதற் கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நீண்டகாலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை, தடுப்பணை கட்டுதல், குடிநீர் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் காவிரி நீரை பயன் படுத்தும் மாநிலங்களின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு முதல் முயற்சி
இதற்கிடையே, கடந்த 2013-ல் அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகேதாட்டு அணை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ரூ.5,912 கோடி செலவில் இந்த அணை கட்டப்படும் என்றும் இதன்மூலம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா மாவட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், தற்போது கர்நாட காவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி தலைமையிலான அரசு, மேகேதாட்டு அணை திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக் கையை கடந்த செப்டம்பரில் தயாரித்து, மத்திய நீர்வள ஆணை யத்தின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது.
மத்திய நீர்வள ஆணையமும் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் கருத்தை கோரி யது. கர்நாடகத்தின் அறிக்கையை நிராகரிக்கும்படி தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் நிலைப் பாடு, விவசாயிகளின் நிலையை தெரிவித்து, கர்நாடக அரசின் புதிய அணை திட்டத்தை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
தமிழக அரசு எதிர்ப்பு
மேகேதாட்டு அணை கட்டுவது குடிநீருக்காக மட்டுமே என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அதை தமிழக அரசு ஏற்க மறுத்தது.
இந்நிலையில், மேகேதாட்டு அணை மற்றும் குடிநீர் திட்டத் துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என கூறியுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, இதுதொடர்பாக வரும் 6-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கர்நாடகத்துக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் வழங் கியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கர்நாடகத்தின் முயற் சிக்கு மத்திய அரசின் அனுமதி அளித்ததற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதுதவிர டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27-ம் தேதி பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார். அதில், ‘கர்நாடக அரசு கூறுவதுபோல், புதிய அணை கட்டுவது குடிநீருக்காக மட்டுமல்ல. அந்த மாநிலத்தின் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை முன்மொழிகிறது. இது, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அப்பட்டமாக மீறுவதாகும். மத்திய நீர்வள ஆணையமானது, தமிழக அரசின் உண்மையான, நியாயமான எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல், மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே, தாங்கள் தலையிட்டு அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை கைவிட அறிவுறுத்த வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், திமுக தோழமை கட்சிகள் நேற்று நடத்திய கூட்டத் தில், மேகேதாட்டு அணை கட்டு வதை தடுக்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. மேலும், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தால், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த விஷயத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஓபிஎஸ் கண்டனம்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறும்போது, ‘‘கர்நாடகத்தின் மேல்பகுதியான மேகேதாட்டுவில் அணை கட்ட வேண்டும் என்றால் கீழ்ப்பகுதியில் உள்ள தமிழகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளது. இதை மீறி அனுமதி அளித்திருந்தால் கண்டிக் கத்தக்கது’’ என்றார்.