

சென்னையில் வீடு புகுந்து திருடும் கும்பலின் கைவரிசை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக அண்ணா நகர், வேளச்சேரி, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் நபர்கள் அதிகரித்துள்ளனர்.
சென்னையில் ஒரேநாளில் 180 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நேற்று வழக்குப் பதிவு செய்யப்ப்ட்டுள்ளது. சமீபகாலமாக குறைந்திருந்த வீடு புகுந்து திருடும் வகையான திருடர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. செயின் பறிப்பு செல்போன் பறிப்புகளில் சிக்கிய பொதுமக்கள் தற்போது வீடு புகுந்து திருடும் நபர்களால் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 3-ம் தேதி கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ஆசிரியை ஒருவர் வீட்டிலிருந்த பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. கடந்த 13-ம் தேதி கொளத்தூர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த மென் பொறியாளர் வீட்டில் இரவு வீடு புகுந்த கொள்ளையர்கள் 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
கடந்த 15-ம் தேதி அயனாவரம் சாலை ஏபிசி அபார்ட்மெண்டில் கார்த்திகேயன் (45) என்பவர் வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகயைத் திருடிச் சென்றனர்.
இதேபோன்று வேளச்சேரியில் கடந்த 17-ம் தேதி தேவராஜன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் திருடப்பட்டது. இதேபோன்று நேற்று ஒருநாள் மட்டும் 180 சவரன் நகை திருட்டுப் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண்ணடியைச் சேர்ந்த சபீர் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 35 சவரன் நகைகள் திருடுபோனதாக நேற்று புகார் அளித்துள்ளார். இதேபோன்று சூளைமேட்டைச் சேர்ந்த மாலா என்பவரது வீட்டில் 35 சவரன் நகைகளையும், நீலாங்கரையைச் சேர்ந்த ராஜா என்பவர் வீட்டில் 20 சவரன் நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று சசிகலாவின் உறவினர் இளவரசியின் வீட்டில் 90 சவரன் நகைகளை திருடிச் சென்றதாக நேற்று புகார் ஆகியுள்ளது. வீட்டின் காவலாளி திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
வேளச்சேரி திருட்டில் போலீஸார் குற்றவாளியை 24 மணிநேரத்தில் பிடித்து நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற வீடு புகுந்து திருடும் நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொதுவாக திருட்டுக் குற்றத்திற்காக சிறை செல்லும் நபர்கள் வெளியே வரும்போது அவர்கள் மீது போலீஸார் கண்காணிப்பு இருக்கும். சமீபகாலமாக இதுபோன்ற விஷயங்களில் ஏற்படும் சுணக்கமும், புதிய ஆட்கள் திருட்டில் ஈடுபடுவதும் குற்றச்செயல்கள் பெருகக் காரணம் என முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.