Published : 22 Nov 2018 05:34 PM
Last Updated : 22 Nov 2018 05:34 PM

அரசு மானியத்தில் திருநங்கை தொடங்கிய உணவகம்: தூத்துக்குடியில் சுயதொழில் முயற்சி

தூத்துக்குடியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் சுயதொழில் முயற்சியாக, அரசின் மானிய உதவியுடன் சிற்றுண்டி விடுதி தொடங்கியுள்ளார். இதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் காயத்ரி என்ற அந்த திருநங்கை.

சமுதாயத்தில் ஒரு காலத்தில் ஒதுக்கி புறம்தள்ளப்பட்ட திருநங்கைகள், இன்று பல்வேறு துறைகளில் கால் பதித்து சாதித்து வருகின்றனர். அரசாங்கமும் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.

சமூக நலத்துறை உதவி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு சமூக நலத்துறை சார்பில் அரசு மானியமாக தலா ரூ. 20 ஆயிரம் உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடந்த 19-ம் தேதி வழங்கினார். அரசு மானியம் வாங்கிய 10 திருநங்கைகளில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த காயத்ரியும் ஒருவர்.

ஏற்கெனவே, சமையலில் ஆர்வம் கொண்ட காயத்ரி, தான் சேமித்து வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தையும் சேர்த்து ரூ. 50 ஆயிரம் செலவில் தூத்துக்குடி சவேரியார்புரம் பிரதான சாலையில் 'நங்கை டிபன் சென்டர்' என்ற பெயரில் சிற்றுண்டி விடுதியை நேற்று காலை தொடங்கினார். இந்த சிற்றுண்டி விடுதியை தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் திறந்து வைத்தார்.

நீண்டகால ஆசை

இது குறித்து காயத்ரி கூறியதாவது: திருநங்கை என்றால் ஏளனத்தோடுதான் பார்க்கிறார்கள். இது நாள் வரை கோயிலில் பூஜை செய்வது. நடனமாடுவது என எனது வாழ்க்கையை ஓட்டினேன். கவுரவமாக தொழில் செய்து வாழ வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை.

சமையலில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. நன்றாக சமைப்பேன். இதனால் ஹோட்டல் தொடங்க வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், இந்த கனவு நீண்ட காலமாக நிறைவேறாமலேயே இருந்தது. இது தொடர்பாக கடன் பெற வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் முயற்சி செய்தேன். ஆனால், பலனளிக்கவில்லை.

இச்சூழலில்தான் அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் மானிய உதவி கிடைத்தது.

இந்த சிற்றுண்டி விடுதியை தொடங்க பாலராமன் என்பவர் தனது இடத்தை கொடுத்து உதவியுள்ளார். அனைத்து திருநங்கைகளும் பேருதவியாக இருந்தனர். இந்த சிற்றுண்டி விடுதியை படிப்படியாக உயர்த்தி ஹோட்டலாக மாற்ற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்காக தரமான, சுகாதாரமான உணவுகளை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பேன் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x