Published : 17 Aug 2014 04:27 PM
Last Updated : 17 Aug 2014 04:27 PM

தமிழிசை சவுந்தரராஜனுக்கு விஜயகாந்த், ராமதாஸ் வாழ்த்து

பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விடுத்த வாழ்த்துச் செய்தியில், "தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் மகப்பேறு மருத்துவர், தமிழ் இலக்கியவாதி, சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பல்வேறு தளங்களில் தனக்கென முத்திரை பதித்தவர் என்பதோடு அரசியலில் மூத்தத் தலைவர் குமரி அனந்தனின் புதல்வியுமான இவர் தமிழக பாஜகவின் தலைவராக திறம்பட செயலாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதோடு பாஜகவின் தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரசியலில் நீண்ட அனுபவமும், பழகுவதற்கு எளிமையானவருமான எச்.ராஜாவுக்கும் தேமுதிக சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து

இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். எனது நண்பர் குமரி அனந்தனின் புதல்வி. பெயருக்கேற்ற வகையில் தமிழ் மொழி மீதும், இனம் மீதும் பற்று கொண்டவர். தமிழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து தெளிவான புரிதல் கொண்டவர். பாரதிய ஜனதாவின் மாநில துணைத் தலைவர், பொதுச்செயலாளர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் சிறப்பாக செயல்பட்டவர். அதற்கான பரிசாக கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதாவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அவரது புதிய பொறுப்பை திறம்பட நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளராக எச்.ராஜா நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளிலும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்ட அவர் புதிய பொறுப்பிலும் சாதிக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x