

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. இந்த புயலால் தென்னை, பலா மற்றும் பழமை வாய்ந்த மரங்கள் சாய்ந்தன. லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்தன, பல கிராமங்கள், குக்கிராமங்கள் உட்பட சிறு ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளன. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தலைஞாயிறு பகுதிகளில் மின்சாரம் இன்னமும் முழுமையாகத் திரும்பவில்லை
ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மின் இணைப்பு பணிகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.