கொசு பிரச்சினை: ஸ்டாலினுக்கு மேயர் மறுப்பு

கொசு பிரச்சினை: ஸ்டாலினுக்கு மேயர் மறுப்பு
Updated on
1 min read

கொசு பிரச்சினை குறித்தும், மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் உண்மைக்கு மாறான வகையில் ஸ்டாலின் பேசுகிறார் என்று மேயர் சைதை துரைசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா நகரில் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் மேயர் துரைசாமி பேசியதாவது:

‘கொசுக்களின் கூடாரமாக காலரா, டெங்கு, மலேரியா நோய்களின் இருப்பிடமாக எங்கும் கழிவுநீரும் குப்பையுமாக சுகாதாரமற்ற நிலையில் சென்னை உள்ளது’ என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரம் மட்டுமே மாநகராட்சிக்கு வந்து சென்றவர், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, பொதுமக்களின் குறைகளை கேட்காதவர் ஸ்டாலின். மாநகராட்சி வளர்ச்சி பற்றிய சிந்தனையுடன், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இரண்டு லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களை சந்தித்தும், ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 144 மனுக்களுக்கு தீர்வும் கண்டுள்ள என்னைப் பார்த்து, ‘பார்க்க முடியாத மேயர்’ என்பது வேடிக்கையான பொய்யாகும்.

சென்னை மாநகராட்சியில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கழிவுநீர் இணைப்புகளை, மழைநீர் வடிகால் வாய்களில் சட்டவிரோதமாக கொடுத்திருப்பதால்தான் கொசு உற்பத்தி அதிகரிப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை 2007ம் ஆண்டு அறிக்கை கொடுத்தது. அதன்மீது திமுக ஆட்சியில் சரியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு சென்னையில் கொசுக்க ளின் தாக்கம் குறைந்திருக்கும்.

உங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் ஒருமுறையாவது அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு கொசு உற்பத்தியாகி இருக்காது.

இன்றைய விலைவாசி உயர்வுக் கும், பணவீக்கத்துக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கும் திமுக, காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசின் தவறான நிதிக்கொள்கையே காரணம்.

இந்தத் தேர்தல் திமுக, காங்கிரஸ் மத்திய கூட்டணி ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலே தவிர, மாநில ஆட்சிக்கான தேர்தல் அல்ல. இதை திசை திருப்பும் வகையில் கருணாநிதி தயாரித்து கொடுத்த அறிக்கையை ஸ்டாலின் வாசித்து வருகிறார். எனவே, இந்த தேர்தல் களம் என்பது திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறிப்பாக 2ஜி அலைக்கற்றை, நிலக்கரி ஊழல், முறைகேடுகள் மற்றும் லஞ்சம், இவைகளுக்கு தீர்ப்பு சொல்லும் தேர்தலாகும்.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in