

கடலூர் துறைமுகத்தில் அபாயத்தைக் குறிக்கும் 9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது. 'கஜா' புயல் இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்நிலையில், கடலூர் துறைமுகத்தில் அபாயத்தைக் குறிக்கும் 9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் துறைமுகம் அருகே கடந்து செல்ல வாய்ப்பிருப்பதால், 9 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புயலினால் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில், "புயலினால் பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 49 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் குடும்பங்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 11 ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகள், குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தங்க பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கால்நடைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 45 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன" என ஆட்சியர் தெரிவித்தார்.