

புயல் தாக்கிய பேரிடர் பாதிப்பால் மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து உறுதி அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்து வருகிறார் அமமுக கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் திரண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கின்றனர்.
ஒரத்தநாடு பகுதியில் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
''நிவாரணத்திற்காக மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் மக்களை கிராமம் கிராமமாகச் சந்திக்க வேண்டும். அதைச் செய்தாலே மக்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவார்கள். மக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர்.
அதிகாரிகள் மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும், படிப்படியாக அனைத்தும் கிடைக்கும் என்பதை உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். இதைத் தெரிவித்து அவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்க வேண்டும். இடி விழுந்ததுபோல் மக்கள் உள்ளனர்.
வெளிநாட்டில்போய் கஷ்டப்பட்டு சம்பாதித்து அதை இங்கு முதலீடு செய்த நிலையில், ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் பார்த்தால் தென்னை மரங்கள் பெரிதாக அழிந்துவிட்டன. கரும்பு, நெல், தேக்கு அனைத்தும் அழிந்துவிட்டது. அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்கிற உத்தரவாதத்தைக் கொடுத்தால் சோழகன்குடிகாடு சுந்தரராஜுக்கு நேர்ந்த துயரமான முடிவை, உயிரிழப்பைத் தடுக்கலாம்.
நான் அமைச்சர்களைச் சொல்லவில்லை. அங்கு செல்லும் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் கடமை இது என்பதை இந்நேரம் வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசிடம் 15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் 25 ஆயிரம் கோடி டெல்டா மாவட்டத்தில் மட்டும் தேவை. முதல் கட்டமாக ரூ. 5000 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு தரவேண்டும்''.
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.